/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையத்தில் வசதியின்றி பயணியர் அவதி
/
ரயில் நிலையத்தில் வசதியின்றி பயணியர் அவதி
ADDED : பிப் 17, 2024 12:36 AM

வில்லிவாக்கம், நான்காவது புதிய முனையமாக மாறவுள்ள வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில், சாலை வசதி உள்ளிட்டவை சரிவர இல்லாததால், பயணியர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அண்ணா நகர் மண்டலத்தில், வில்லிவாக்கம் ரயில் நிலையம் உள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, வில்லிவாக்கம் வழியாக ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வில்லிவாக்கத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணித்து வருகின்றனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, நான்காவது புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை மாற்ற, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியிருந்தார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையத்தில், பயணியர் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, நுழைவாயில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியின் அருகில், அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், முதியோர் உள்ளிட்டோர் தடுமாறி விழுகின்றனர். அதேபோல், சாலை முழுதும் பள்ளம் மேடுகளாக உள்ளன.
ரயில்வே சர்வீஸ் சாலையும், பல ஆண்டுகளாக படுமோசமாக காட்சியளிக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரயில் நிலையத்தை புதிய முனையமாக மாற்றுவதற்கு முன், ரயில் நிலையத்தில் உள்ள மேற்கண்ட பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.