/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரதான சாலைகளில் 'ஒட்டு வேலை' துவக்கம்
/
பிரதான சாலைகளில் 'ஒட்டு வேலை' துவக்கம்
ADDED : டிச 08, 2025 05:39 AM

சென்னை: சென்னை உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகளில், மழையால் சேதமடைந்த பிரதான சாலைகளில் சீரமைப்பு எனும் ஒட்டு போடும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவக்கியுள்ளது. இரவு நேரத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
'டிட்வா' புயல் காரணமாக, கடந்த வாரம் மூன்று நாட்களாக விடாது மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால், சென்னையில் பெரும்பலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின.
வாகன ஓட்டிகள் பெரிதும் திண்டாடினர். இதேபோல், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாகின.
இதுகுறித்து, நம் நாளிதழில் படங்களுடன் விரிவான செய்தி, இரு தினங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து, பிரதான சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக அரசு, 1.50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி., சாலை, வேளச்சேரி - தாம்பரம், ஓ.எம்.ஆர்., - இ.சி,ஆர்., போன்ற பகுதிகளில் சாலைகளில், 'பேட்ச் ஒர்க்' எனும் ஒட்டு வேலைகளை, மாநகராட்சி துவக்கியுள்ளது.
பகலில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், இரவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் இருந்து ஒரே இடத்தில் வடியும் மழைநீரால், சாலையின் பல பகுதிகள் குண்டும், குழியுமாக மாறின. அதில் வாகனங்கள் செல்லும்போது குழிகள் பெரிய பள்ளங்களாக மாறின.
போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான இடங்களை அடையாளம் கண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதனால், வாகனங்கள் சீராக செல்ல முடியும். பருவமழை முடிந்தபின், முழு சாலையும் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னை மாநகராட்சி, சாலைகள் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் உள்ளது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

