/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாவில் குளறுபடி: வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை
/
பட்டாவில் குளறுபடி: வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை
பட்டாவில் குளறுபடி: வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை
பட்டாவில் குளறுபடி: வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை
ADDED : நவ 14, 2025 02:35 AM
சென்னை: இலவச வீட்டு மனை பட்டாவில், பணத்திற்காக உறவு முறையை மாற்றி பதிவு செய்து கொடுத்த, வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், நந்தம், தரிசு, மேய்க்கால் புறம்போக்கு இடங்களில் வசித்த, 30,000க்கும் மேற்பட்டோருக்கு, ஆன்லைன் வாயிலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதனால், சில வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கூட்டு சேர்ந்து, ஆவணத்தில் இருக்கும் பதிவுகளை ஆன்லைனில் பதிவேற்றும்போது குளறுபடி செய்துள்ளனர்.
முருகன் மனைவி ரேகா என பதிவதற்கு பதிலாக, ரேகா மனைவி முருகன் என மாற்றினர். இதுபோல் உறவு முறைகள் மாற்றம் மட்டுமின்றி, சர்வே எண்களிலும் எழுத்து பிழைகளை ஏற்படுத்தினர்.
இதனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியிடம் பட்டா பெற்றவர்கள், மீண்டும், வி.ஏ.ஓ.,க்களிடம் முறையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருத்தம் செய்ய, 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, பெயர் குளறுபடியால் பாதிக்கப்பட்டவர்கள், தாலுகா அலுவலகங்கள் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
மனுக்களை பெற்று பட்டாக்களில் சரியான பெயரை பதிவு செய்து வழங்க, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
பட்டா குளறுபடி செய்த வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில், கவனத்துடன் செயல்படும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தர விட்டுள்ளார்.

