/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடிந்து விழும் நிலையில் பட்டாபிராம் மீன் சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பீதி
/
இடிந்து விழும் நிலையில் பட்டாபிராம் மீன் சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பீதி
இடிந்து விழும் நிலையில் பட்டாபிராம் மீன் சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பீதி
இடிந்து விழும் நிலையில் பட்டாபிராம் மீன் சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பீதி
ADDED : அக் 28, 2025 12:58 AM

ஆவடி: இடிந்து விழும் நிலையில் உள்ள பட்டாபிராம் மீன் சந்தை கட்டடத்தால், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும்முன் இடித்து, நவீன வசதிகளுடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ஆவடி அடுத்த தண்டுரை, மாங்குளம் பகுதியில் பட்டாபிராம் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, காய்கறி, மளிகை கடை, கறிக்கடை மற்றும் மீன் கடைகள் என, 36 கடைகள் இருந்தன.
பொதுமக்கள், தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி வந்தனர்.
குறிப்பாக, பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து, 200 மீட்டர் துாரத்தில் இந்த சந்தை அமைந்துள்ளது.
இதனால், பட்டாபிராம் ஆவடி, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளானோர் மின்சார ரயில்களில் வந்து மொத்த மற்றும் சில்லரை விலையில் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில், 2003ல் ஆவடி நகராட்சியாக இருந்தபோது, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதே இடத்தில் 58 கடைகள் கட்டப்பட்டன. கட்டடங்கள் முறையாக கட்டவில்லை என்ற அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், சந்தைக்கு உள்ளே இருந்த சில காய்கறி வியாபாரிகள், சாலையோரத்தில் வியாபாரம் செய்ய துவங்கினர். கடந்த 2010ல், பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது. அதன்பின், பட்டாபிராம் சந்தைக்கு உள்ளே இருந்த மீதமுள்ள காய்கறி கடைகளும் மேம்பாலத்தின் கீழ் இடம் பெயர்ந்தன.
இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டாபிராம் சந்தை, மீன் மட்டும் விற்கும் சந்தையாக மாறியது. கட்டடம் சிதிலமடைந்ததால், கொரோனா காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது.
மீன் வியாபாரிகள் போராட்டங்கள் நடத்தியும், வழக்கு தொடர்ந்தும், மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது, கட்டடத்தின் சுவரில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, மேலும் வலுவிழந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சிதிலமடைந்த பட்டாபிராம் மீன் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்து, வாகன நிறுத்த வசதியுடன் கூடிய நவீன சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நவீன வசதியுடனான சந்தை
இது குறித்து பட்டாபிராம் மீன் வியாபாரிகள் சங்க தலைவர் மாரி கூறியதாவது:
மீன் சந்தை கட்டடம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ளது. மழைக்காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, தற்காலிக மாற்று இடம் அமைத்து கொடுத்து, பழைய கட்டடத்தை இடித்து, வாகன நிறுத்தம் மற்றும் நவீன வசதியுடன் கூடிய பட்டாபிராம் சந்தை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், தெற்கு பஜார் அணுகு சாலையில் நிறுத்தப்படும் வாகன எண்ணிக்கை குறைந்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
92 கடைகள்
பட்டாபிராம் மீன் சந்தையில் 92 கடைகள் உள்ளன. இங்கு, பழவேற்காடு, காசிமேடு பகுதிகளில் இருந்து மீன் கொண்டு வரப்படுகிறது. அதை, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், பெரியபாளையம், பாக்கம், கோலப்பஞ்சேரி, சோரஞ்சேரி, பூந்தமல்லி, அன்னமேடு, ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வார நாட்களில் 500 பேரும், வார இறுதி நாட்களில் 5,000க்கும் மேற்பட்டோரும் மீன் வாங்கி செல்கின்றனர்.
வார இறுதி நாட்களில் 3,000 கிலோவுக்கு மேல் மீன் விற்பனையாகும் என கூறப்படுகிறது.

