/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாபிராம் மேம்பால -ஒருவழிப்பாதை திறப்பு
/
பட்டாபிராம் மேம்பால -ஒருவழிப்பாதை திறப்பு
ADDED : செப் 26, 2024 12:23 AM

ஆவடி, சென்னை --- திருவள்ளூரை இணைக்கும் வகையில், ஆவடி அடுத்த பட்டாபிராமில் 'எல்.சி.,கேட் - 2' ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இங்கு, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்வே கேட் மூடப்பட்டு, சென்னையில் இருந்து பட்டாபிராம் 'சைடிங்' செல்லும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பல்வேறு கோரிக்கைகளுக்கு அடுத்து, மத்திய - மாநில அரசுகள், சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தன.
இதற்காக, மூன்று முறை திட்ட மதிப்பீடு திருத்தி அமைக்கப்பட்டு, 78.31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2018ல் பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஏற்பட்ட இடையூறு காரணமாக பணிகள் மந்தகதியில் நடந்து வந்தன.
இதற்காக, சி.டி.எச்., சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. ஒருவழியாக, ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள், கடந்த 23ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது.
இதையடுத்து, நேற்று மாலை 5:00 மணியளவில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், எம்.எல்.ஏ.,க்கள் நாசர் மற்றும் கிருஷ்ணசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெயர் மிஸ்ஸிங்!
மேம்பாலம் திறப்பு விழாவிற்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பேனரில், கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் ஆவடி மேயர் உதயகுமார் பெயர்கள் இடம் பெறவில்லை.
இது அனைவர் மத்தியிலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அமைச்சர் காந்தி பதில் அளிக்கவில்லை.

