/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரிவாக்க பகுதிகளில் குடிநீர் இணைப்பின்றி மக்கள் தவிப்பு! இடையூறு, நிர்வாக சிக்கல்களை களையுமா வாரியம்?
/
விரிவாக்க பகுதிகளில் குடிநீர் இணைப்பின்றி மக்கள் தவிப்பு! இடையூறு, நிர்வாக சிக்கல்களை களையுமா வாரியம்?
விரிவாக்க பகுதிகளில் குடிநீர் இணைப்பின்றி மக்கள் தவிப்பு! இடையூறு, நிர்வாக சிக்கல்களை களையுமா வாரியம்?
விரிவாக்க பகுதிகளில் குடிநீர் இணைப்பின்றி மக்கள் தவிப்பு! இடையூறு, நிர்வாக சிக்கல்களை களையுமா வாரியம்?
ADDED : செப் 06, 2025 12:32 AM
சென்னை விரிவாக்க பகுதிகளில் குறுகிய தெருக்கள், புதிதாக உருவான தெருக்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு, அரசியல்வாதிகள் இடையூறு போன்ற காரணங்களால், குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. வார்டு தோறும் 1,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைந்து, சமமான குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என, விரிவாக்க பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு வரை, 174 சதுர கி.மீ., பரப்பில், 10 மண்டலங்கள், 155 வார்டுகளுடன் செயல்பட்டு வந்தது. வளர்ச்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளை இணைத்து, பெரு நகர சென்னை மாநக ராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது.
தற்போது, 426 சதுர கி.மீ., பரப்பில், 200 வார்டுகள் உடைய 15 மண்டலங்களாக மாற்றப்பட்டது. பின், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்த வார்டுகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
சில மண்டலங்களில் அதிக வார்டுகளும், சில மண்டலங்களில் குறைவான வார்டுகளும் உள்ளதால், சமமான வளர்ச்சி என்ற இலக்குடன் சீரான நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.
சென்னை அபார வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமமான வளர்ச்சி கிடைக்கச் செய்வது அவசியம்.
சென்னை குடிநீர் வாரியம் மூலம், 8.20 லட்சம் குடிநீர் இணைப்புக்கு, தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு, 10 லட்சத்திற்கும் மேல் இருக்க வேண்டும்.
ஆனால், திட்ட மதிப்பீட்டுக்கு பின் உருவான புதிய தெருக்கள் மற்றும் குறுகிய தெருக்களில் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
இங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக குடிநீர், கழிவுநீர் இணைப்பு கேட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பிரச்னை, விரிவாக்க மண்டலங்களில் அதிகமாக உள்ளது.
அதேபோல், 3,000 கோடி ரூபாய்க்கு மேல், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பணி முடிந்த வார்டுகளில், குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க முடியாமல், குடிநீர் வாரியம் திணறுகிறது.
காரணம், பல ஆண்டுகளாக ஆதாயம் பார்த்து வரும், குடிநீர், கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், சில கவுன்சிலர்கள் வழியாக இடையூறு செய்வதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஹோட்டல், விடுதி போன்ற வணிகம் சார்ந்து செயல்படும் கட்டடங்களில், சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் திருடப்படுகிறது. இதற்காக பள்ளம் தோண்டும்போது, குழாய்கள் சேதமடைந்து குடிநீரில், கழிவுநீர் கலப்பு பிரச்னை ஏற்படுகிறது.
தவிர, குழாய் வால்வு பழுது, இயந்திர நுழைவு வாயில் மூடி உள்வாங்குவது போன்ற காரணமாக, குடிநீர் வினியோகம் தடை, கழிவுநீர் வெளியேற்றம், குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்னை ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் அழுத்தம் குறைந்து, குறைந்த அளவு குடிநீர் கிடைக்கிறது. இதுபோன்று பல்வேறு காரணங்களால், குடிநீர் சமமான அளவில் வழங்க முடியாமல் வாரியம் திணறுகிறது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வார்டு வரையறை செய்தபோது, குடிநீர் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, பல தெருக்கள் விடுபட்டன. குறுகிய தெருக்களில், இயந்திரங்கள் கொண்டு பள்ளம் தோண்ட முடியாமல், அங்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
அங்கு, மனித உழைப்பை பயன்படுத்தி தான் பள்ளம் தோண்ட வேண்டும். இதுபோன்று, ஒவ்வொரு வார்டிலும் 40 முதல் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது.
விரிவாக்க மண்டலங்களில் குடியிருப்புகள் பெருகிவிட்டன. உதாரணமாக, 2,000 வீடுகள் இருந்தால், எதிர்காலத்தை கணக்கிட்டு, 3,000 வீடுகள் என திட்ட அறிக்கை தயாரித்து, புதிய குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பல வார்டுகளில் புதிய தெருக்கள் உருவானதால், 5,000க்கும் மேற்பட்ட வீடுகளாக அதிகரித்துள்ளன. குறுகிய தெருக்கள் மற்றும் புதிதாக உருவான தெருக்களுக்கு, திட்ட அறிக்கை தயாரித்து, நிதி ஒதுக்க வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கழிவுநீர், குடிநீர் சார்ந்த பணம் சம்பாதித்து வரும் லாரி உரிமையாளர்கள், சில கவுன்சிலர்கள் இடையூறு செய்வதால், இணைப்பு வழங்க முடியவில்லை. அமைச்சர் நேரு தலையிட்டால் தான், இணைப்பு வழங்குவதை வேகப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இல்லந்தோறும்
இணைப்பு என்னாச்சு?
சென்னையில் கழிவுநீர் இணைப்பு இல்லாத வீடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக, 'இல்லந்தோறும்இணைப்பு' என்ற புதிய திட்டத்தை, சென்னை குடிநீர் வாரியம் அறிவித்தது. அதன்படி குடிநீர், கழிவுநீர் இணைப்புக்காக தலா, 7,500 ரூபாய் என, 15,000 ரூபாய் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், சென்னையில் பல பகுதிகளில் நீண்ட காலத்திற்கு பின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டு விட்டது. விரிவாக்க பகுதிகளில் குறுகிய தெருக்கள், புதிதாக உருவான தெருக்கள், குடியிருப்புகளிலும் இந்த முறையை பின்பற்றி இணைப்புகளை வழங்கினால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
- நமது நிருபர் -