UPDATED : நவ 26, 2026 08:29 PM
ADDED : நவ 26, 2026 08:29 PM
ஆவடி: ஆவடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ‘ஆதார்’ திருத்த மையத்தை, முன்னறிவிப்பு இன்றி ரயில் நிலையம் அருகே மாற்றியுள்ளதால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பட்டாபிராம், மாடர்ன் சிட்டி பகுதி, ஆவடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், எட்டு ஆண்டுகளாக ஆதார் மையம் செயல்பட்டு வந்தது.
இதனால், பட்டாபிராம், திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, ஆவடி ரயில் நிலையம் அருகே, ஆதார் மையம் மாற்றப்பட்டு உள்ளது. இதையறியாமல், மக்கள் தினமும் வந்து அலைச்சலை சந்திக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஆவடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ரேஷன் கார்டு, வருவாய் துறை தொடர்பான சான்றிதழ் பெறும் இ – சேவை மையம், உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் சேவைகளுக்காக வரும்போது, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக அதன் மையத்தை பயன்படுத்துவது மிகவும் வசதியாக இருந்தது; போக்குவரத்துக்கும் எளிதாக இருந்தது.
இந்நிலையில், இங்கிருந்து ஆவடி ரயில் நிலையம் அருகே மாற்றியுள்ளதால், அலைச்சலாக உள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்திலே ஆதார் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
