'டாஸ்மாக்' கடையை இழுத்து மூட சங்கிலியுடன் மக்கள் போராட்டம்
'டாஸ்மாக்' கடையை இழுத்து மூட சங்கிலியுடன் மக்கள் போராட்டம்
ADDED : செப் 07, 2026 01:48 AM
வண்ணாரப்பேட்டை: பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 'டாஸ்மாக்' கடையை இழுத்து மூட, பூட்டு, சங்கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர்.
பழைய வண்ணாரப்பேட்டை, மின்ட் சஞ்சீவிராயன் தெருவில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருக்கும் நிலையில், இந்த மதுக்கடைக்கு வரும் 'குடி'மகன்களால், தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.
அதனால், அந்த மதுக்கடையை மூட வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதிமக்கள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று, மதுக்கடையை இழுத்து மூட, பூட்டு, சங்கிலியோடு ஆவேசமாக வந்தனர்.
தகவலறிந்த அதிகாரிகள் வலியுறுத்தலால், 60க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். போராட்டம் நடத்த முயன்றோரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
மேலும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில், டாஸ்மாக் அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அமைதி பேச்சு இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் கூறினர். அதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
