/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதார் சேவை மையத்தில் தினமும் மக்கள் அவதி
/
ஆதார் சேவை மையத்தில் தினமும் மக்கள் அவதி
ADDED : ஜூலை 23, 2025 12:25 AM

சென்னை, கோயம்பேடில் செயல்படும், ஆதார் சேவை மையத்தில், தினசரி கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பயனாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நாட்டில் மத்திய - மாநில அரசு சேவைகளை பெறுவதற்கு, முக்கியமான ஆவணமாக ஆதார் உள்ளது. இந்த சேவைகளை எளிமையாக பெறுவதற்கு, ஆதார் சேவை மையங்கள் செயல் படுகின்றன.
கோயம்பேடு, ஜவஹர்லால் நேரு சாலையில் ஆதார் சேவா கேந்திரா செயல்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு நுாற்றுக் கணக்கான மக்கள் ஆதாரில் பெயர் மாற்றம், புது கார்டிற்கு விண்ணப்பித்தல், மொபைல் போன் எண் மாற்றம் போன்ற வற்றுக்காக வருகின்றனர்.
ஊழியர்கள் அடாவடி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட 'டோக்கன்' மட்டுமே வழங்கப்படும் நிலையில், கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பலர் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிப் படுகின்றனர்.
ஆனால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:
ஆதாரில் தமிழில் பெயர் சரியாகவும், ஆங்கிலத்தில் பிழையாகவும் இருந்தது. இதை மாற்ற, கடந்த 18ம் தேதி இணையதளத்திற்கு சென்று சந்திக்க நேரத்தை பதிவு செய்தேன்.
பின், நேற்று காலை 9:00 மணிக்கு கோயம்பேடில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்றபோது, நுாற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்தனர். அதில் பெரும்பாலானோருக்கு விபரம் தெரியவில்லை.
வரிசையில் காத்திருந்து மையத்திற்கு உள்ளே சென்ற பின் 'டோக்கன்' தந்தனர். இதை வாங்குவதற்கே, இரண்டரை மணி நேரமாகிவிட்டது.
பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு, ஒரு படிவத்தை மட்டுமே தந்தனர். இதற்கும் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.
பூந்தமல்லி, தாம்பரம், கிண்டி என பல இடங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். சந்தேகம் குறித்து கேட்க சென்றால், அங்குள்ள செக்யூரிட்டிகள் விரட்டுகின்றனர். ஒப்புகை சீட்டு இருந்தால் உள்ளே வா என ஒருமையில் பேசுகின்றனர்.
முதியவர்களும், கை குழந்தையுடன் வருவோரும் சிரமமப்படுகின்றனர். இதை நிர்வகிக்கும் நிர்வாகமும் எதையுமே கண்டுகொள்வதில்லை.
அங்குள்ள ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். 'இங்கு ஏன் வந்தோம்' என தோன்றும் வகையில் ஊழியர்களின் செயல்பாடு உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.