/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மும்பை போல் சென்னையிலும் மக்கள் உயிருக்கு... 'டேஞ்சர்!' 2,000 பேனர்களில் எதற்குமே அனுமதியில்லை
/
மும்பை போல் சென்னையிலும் மக்கள் உயிருக்கு... 'டேஞ்சர்!' 2,000 பேனர்களில் எதற்குமே அனுமதியில்லை
மும்பை போல் சென்னையிலும் மக்கள் உயிருக்கு... 'டேஞ்சர்!' 2,000 பேனர்களில் எதற்குமே அனுமதியில்லை
மும்பை போல் சென்னையிலும் மக்கள் உயிருக்கு... 'டேஞ்சர்!' 2,000 பேனர்களில் எதற்குமே அனுமதியில்லை
ADDED : மே 15, 2024 11:33 PM

மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் மற்றும் புறநகர் மாவட்டங்களிலும் அபாயகரமான வகையில், விளம்பர பதாகைகள், ராட்சத விளம்பர பலகைகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. சென்னையில் 2,000 பேனர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு பேனருக்கு கூட மாநகராட்சி அனுமதி பெறப்படவில்லை என்பதும், தொடர்ந்து அவற்றின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை சம்பவத்தை தொடர்ந்து அவசரம் அவசரமாக இந்த விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற, புரோக்கர்கள் வாயிலாகவும், அரசியல் கட்சியினர் வழியிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் விளம்பர பேனர்களால், சாலையில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கடந்த 2019ல் சுபஸ்ரீ என்ற பெண், அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்றப்பட்டதுடன், நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும், விளம்பர பலகைகளுக்கு தடை விதித்ததுடன், கண்காணிக்கவும் உத்தரவிட்டு இருந்தது.
கட்டாயம்
சில ஆண்டுகளாக குறைந்திருந்த விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளின் எண்ணிக்கை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது புற்றீசல் போல் அதிகரித்து உள்ளது.
பல வீடுகளில் மொட்டை மாடிகளில் கூட, தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன. வாடகை கிடைப்பதால், அதற்கு கட்டடங்கள் உரிமையாளர்களும் துணை போகின்றனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி, விளம்பர பலகைகள், பதாகைகள் வைத்துக்கொள்ள உரிய வழிகாட்டுதலுடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
அவ்வாறு உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றப்பட வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ள குறிப்பிட்ட சில விளம்பர பலகைகள், அதை சுட்டிக்காட்டியே தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
ஆனால், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கண்டிப்பான உத்தரவுக்கு பின், புதிதாக ஒரு விளம்பர பலகைகளுக்குகூட மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், சென்னை மற்றும் புறநகர் முழுவதும் ஏராளமான விளம்பர பலகைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எந்த அமைப்பிடம் அனுமதி பெற்று, இவை வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, காட்கோபர் உள்ள சம்தா காலனியின் ரயில்வே பெட்ரோல் பங்க் அருகே எழுப்பப்பட்ட ராட்சத விளம்பர பலகை, கடந்த, 13ம் தேதி வீசிய புழுதிப் புயல் மற்றும் மழையால் சரிந்து விழுந்தது.
அதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர சம்பவம், நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது.
இந்த விபரீதத்தை உணராமல் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அனுமதி இல்லாமல், 5,000க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
சென்னையிலும் இதய பகுதியான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பசுமை புறவழிசாலை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும், வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் முயன்றாலும், அரசியல் கட்சியினர், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், விளம்பர நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்து நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவற்றின் அனுமதி வாயிலாக மிக சொற்பமான வருவாய் இருந்தாலும், மக்களின் உயிருடன் விளையாடும் செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கைவிடலாம்
சொத்து வரி உள்ளிட்ட மற்ற வருவாய்களை சிறப்பாக கையாண்டாலே, இது போன்ற மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள விளம்பர பலகைகளின் வருவாயை முற்றிலும் கைவிடலாம் எனவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதியின்படி, விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சில விதிமுறைகள் உள்ளன. இதன்படி, 1 சதுரஅடிக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கட்டணம்; சாலையில் அகலத்தை பொருத்து, அவற்றில் எந்த அளவில் விளம்பர பதாகைகள், பலகைகள் அமைக்க வேண்டும் போன்ற விதிகள் உள்ளன.
குறிப்பாக, 20 அடி அகலம் 12 அடி உயரம் என்பது தான் அதிகபட்ட அளவாக இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் அமைக்கக் கூடாது.
ஆனால், எவ்வித விதிமுறையும் பின்பற்றாமல் ராட்சத விளம்பர பலகைகள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், பலத்த புயல் மழையின் போது பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்தும் வகையிலும் பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு விளம்பர பலகைகள், பதாகைகளுக்கும் இதுவரை முறைப்படியான அனுமதி சான்று வழங்கவில்லை. இதற்கான அனுமதி சான்றை பெற்று தர, இடைதரகர்கள் உள்ளனர். அவர்கள், மாநகராட்சி அதிகாரிகளை தனியாக கவனித்து, முறைப்படி அமைக்காத விளம்பர பதாகைகள், பலகைகளுக்கும் அனுமதி கோரி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளுக்கு அனுமதி கோரி 800க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில், 200க்கு மட்டுமே அனுமதி தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு, அரசியல் கட்சினர் ஆதரவு இருப்பதால், நேர்மையான அதிகாரிகளாலும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனுமதியில்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை அகற்ற, மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். சாலையோரங்கள், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லுாரிகள், பேருந்து நிறுத்தங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஜெ.ராதாகிருஷ்ணன்
கமிஷனர், சென்னை மாநகராட்சி
- நமது நிருபர் குழு -