/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டா நிலங்களில் மணல் எடுக்க அனுமதி
/
பட்டா நிலங்களில் மணல் எடுக்க அனுமதி
ADDED : ஆக 13, 2025 09:46 AM
சென்னை: 'ஆற்று மணல் குவாரிகள் திறக்க தாமதமாகும் நிலையில், தனியார் பட்டா நிலங்களில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்' என்று, முதல்வரிடம் லாரி உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
தமிழக மணல், எம் - சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு நாளொன்றுக்கு, 15,000 'லோடு' மணல் தேவைப்படுகிறது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு மட்டும் தினமும், 5,000 லோடு மணல் தேவைப்படுகிறது.
இணையவழியில் மணல் விற்பனை துவக்கப்பட்ட போது, தினமும், 13,500 லோடு மணல் கிடைத்து வந்தது. தற்போது, ஆன்லைன் முறையில் மிக குறைந்த அளவிலேயே மணல் கிடைகிறது.
இதனால், தமிழகம் முழுதும் உள்ள, 55,000 மணல் லாரி உரிமையாளர்கள், அதை சார்ந்த பணியாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
அதேநேரம், தரமான மணல் கிடைக்காமல், வீடு கட்டுவோரும் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஏற்கனவே பல முறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மணல் திட்டுக்கள் உள்ள பட்டா நிலங்களை கண்டறிந்து, மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். கலெக்டர்களுக்கும், கனிம வளத் துறைக்கும் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். சவுடு மணல் குவாரிகள் போன்று, இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில், முதல்வரின் நடவடிக்கையை எதிர்பார்த்து, மனு அனுப்பி காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.