ADDED : ஜூன் 08, 2026 02:02 AM

பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் கடற்கரையில் கண்டெடுத்த மொபைல் போனை, உரியவரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெசன்ட் நகர் கடற்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரூபா, 35; துாய்மை பணியாளர். நேற்று காலை, கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை கண்டெடுத்தார். மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, தன்னிடமே அதை வைத்திருந்தார்.
ஒரு மணி நேரத்திற்குப் பின், அந்த மொபைல் போன் எண்ணுக்கு, கே.கே.நகரைச் சேர்ந்த கோகுல் என்பவர் தொடர்பு கொண்டு, குழந்தையுடன் கடற்கரையில் விளையாடிய போது மொபைல் போனை தவறவிட்டதாக தெரிவித்தார்.
மொபைல் போனின் அடையாள விபரங்களை அதிகாரிகள் கேட்டறிந்து, அது கோகுலுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்தனர்.
பின், அவரை வரவழைத்து, அதிகாரிகள் முன்னிலையில் உரியவரிடம் மொபைல் போன் ஒப்படைக்கப்பட்டது. துாய்மை பணியாளர் ரூபாவின் நேர்மையை, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
