/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளாஸ்டிக் கழிவால் கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு
/
பிளாஸ்டிக் கழிவால் கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு
UPDATED : அக் 04, 2025 07:10 AM
ADDED : அக் 04, 2025 12:15 AM

காசிமேடு : சென்னையில், பிளாஸ்டிக் கழிவு அதிகரிப்பால் கடல் மற்றும் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, கடல் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையில் சர்வதேச துறைமுகம், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்டவற்றின் மூலம் தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடக்கிறது. அதேபோல, சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு தலமாக மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள் உள்ளன.
இத்தனை சிறப்புமிக்க கடல் மற்றும் கடற்கரை பகுதிகள் பராமரிப்பில், அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதன் காரணமாக, கடல் மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
கடல் சுற்றுச்சூழல் மட்டுமின்றி கடல் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கும் சிக்கலாகும் பிளாஸ்டிக்கால், பவளப்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.
கடலில் இருந்து பிளாஸ்டிக்கை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமானது; கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
எனவே, கடல் மற்றும் கடலோர சுற்றுச்சுழல் பாதுகாப்பை கருத்தில் வைத்து, கடற்கரை பகுதிகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, நெறிமுறைகள் வகுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த காலங்களை ஒப்பிடுகையில், கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது; இதற்கு சுருக்குமடி வலை ஒரு காரணம் என்றாலும், பிரதான காரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இந்த விவகாரத்தில், அரசும் கடலோர பகுதிகள் மக்களும் சுற்றுச்சூழல் பாதிக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.