/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருட வந்ததாக நினைத்து வாலிபரை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
/
திருட வந்ததாக நினைத்து வாலிபரை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருட வந்ததாக நினைத்து வாலிபரை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருட வந்ததாக நினைத்து வாலிபரை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ADDED : அக் 11, 2025 01:32 AM

செங்குன்றம், திருடச் சென்றதாக, வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொன்று கால்வாயில் வீசியதாக, தனியார் தொழிற்சாலை உரிமையாளரின் மகன் உட்பட நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்; தலைமறைவாக உள்ளோரை தேடி விசாரிக்கின்றனர்.
செங்குன்றம் அடுத்த காட்டுநாயக்கன் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 26. இவர், சாலையோரம் கிடக்கும் பழைய பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது, கோனிமேடு பகுதியில் உள்ள தொழிற்சாலை பக்கம், மணிமாறனை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணிமாறனின் உறவினர்கள், தொழிற்சாலைக்கு சென்று மணிமாறன் குறித்து கேட்டுள்ளனர்.
தொழிற்சாலையில் இருந்தவர்கள், 'தொழிற்சாலையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோய் உள்ளது. அந்த பணத்தை கொடுத்தால் மணிமாறனை விட்டு விடுவோம். இல்லையென்றால் போலீசில் ஒப்படைப்போம்' எனக் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், எல்லையம்மன் பேட்டை கிராமத்திலுள்ள கால்வாயில் மணிமாறன் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, நேற்று காலை தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் போலீசார், மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மணிமாறனை தொழிற்சாலை பணியாளர்கள் அடித்து கொன்றதாக செய்தி பரவியது.
இதையடுத்து மணிமாறனின் உறவினர்கள், தொழிற்சாலை முன் கூடி கோஷமிட்டனர்.
தகவலறிந்து தொழிற்சாலைக்கு சென்ற போலீசார், அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து, மணிமாறனின் உறவினர்கள் கூறியதாவது:
கோனிமேடு பகுதியில் அமைந்துள்ள, தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் அருகே நேற்று முன்தினம் மாலை, பொருட்களை சேகரித்த மணிமாறனை, தொழிற்சாலை பணியாளர்கள் திருட வந்துள்ளதாக நினைத்துள்ளனர்.
மணிமாறனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, தலையில் மொட்டையடித்து கம்பத்தில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் பலமாக தாக்கி கொன்று கால்வாயில் வீசியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை வல்லுநர்களுடன் தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் மகன் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்; தலைமறைவான தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் சில பணியாளர்களையும் தேடி வருகின்றனர்.