/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு காவல் துறை மீது குற்றச்சாட்டு
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு காவல் துறை மீது குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு காவல் துறை மீது குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு காவல் துறை மீது குற்றச்சாட்டு
ADDED : அக் 09, 2025 02:42 AM
சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியும், வழக்கு ஆவணங்களை மாநில காவல்துறை வழங்கவில்லை என, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 27 பேரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், 27 பேருக்கும் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 24ல் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, மாநில அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை, வரும் 10ம் தேதிக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான நாகேந்திரன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை உடனிருந்து கவனித்து கொள்ள, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என, சிறையில் உள்ள நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அஸ்வத்தாமன் தரப்பில், 'வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ., வசம், மாநில காவல்துறை ஒப்படைக்கவில்லை.
'ஜாமின் வழங்கக்கூடாது என்ற உள் நோக்கத்துடன் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், 'சி.பி.ஐ.,க்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யும் வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ஜாமின் கோரிய வழக்கின் விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.