/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விட போலீசார் முடிவு
/
உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விட போலீசார் முடிவு
உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விட போலீசார் முடிவு
உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விட போலீசார் முடிவு
ADDED : அக் 29, 2025 01:58 AM

சென்னையில் போக்குவரத்து போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் வாகனங்கள் குவித்து வைக்கப் பட்டுள்ளன.
அவற்றில் உரிமை கோர முன்வராதவர்களின் வாகனங்களை சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை, போலீசார் எடுத்து வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 55 போக்குவரத்து காவல் நிலையங்களும், 13 போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்களும் உள்ளன.
பறிமுதல் போக்குவரத்து காவல் நிலைய போலீசார், போக்குவரத்து நெரிசலை கண்காணித்து தீர்ப்பது, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வர்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலை விபத்துகளின் வழக்குகளை கவனிப்பது, பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
அந்த வகையில், மது அருந்தி விபத்து ஏற்படுத்தியவர்களின் வாகனம் உட்பட பல வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், காவல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு சிலர் மட்டும் முறையாக வழக்குகளை முடித்துக் கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்று செல்கின்றனர். பெரும்பாலானோர், வாகனங்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை.
இதனால், காவல் நிலையங்களில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல், போலீசார் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக, அண்ணா சாலை, அடையாறு, அண்ணா நகர் உள்ளிட்ட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், காவல் நிலைய வளாகம், சாலையோரம் ஆகிய இடங்களில் அதிகளவில் குவித்து வைத்துள்ளனர்.
உதிரிபாகம் திருட்டு இந்த வாகனங்களால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. தவிர, அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்த இடமும் இல்லை. குறிப்பாக, பறிமுதல் வாகனங்களில் இருந்து உதிரி பாகங்கள் திருடுபோவதால், போலீசாருக்கு தலைவலியாக இருக்கிறது.
அதனால், பறிமுதல் வாகன பெருக்கத்தை தடுக்கவும், இருக்கும் வாகனத்தை அப்புறப்படுத்தவும், போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, போக்கு வரத்து காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்களில், உரிமை கோராமல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில், உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம்விட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:
சென்னை கிழக்கு மண்டலத்தில் 434; தெற்கு மண்டலத்தில் 870 வாகனங்கள், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களை அப்புறப்படுத்த உள்ளோம்.
வழக்கு பதிவு முதற்கட்டமாக, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் பேசி வழக்கை முடித்து, வாகனங்களை திரும்ப பெற்றுச் செல்லும்படி வலியுறுத்தி வருகிறோம். அதன்படி இதுவரை, 170 வாகனங்கள் வழக்குகள் முடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
உரிமை கோரப்படாத வாகனங்களை, அந்தந்த சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. சட்ட நடவடிக்கைக்கு பின், உரிமை கோரப்படாத வாகனங்கள், ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படும்.
சென்னை கமிஷனரின் இந்த நடவடிக்கையால், காவல் நிலையங்களில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, இடம் தாராளமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

