/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலைகளை பாதுகாக்க மாநகராட்சியுடன் போலீசார்... கைகோர்ப்பு
/
நீர்நிலைகளை பாதுகாக்க மாநகராட்சியுடன் போலீசார்... கைகோர்ப்பு
நீர்நிலைகளை பாதுகாக்க மாநகராட்சியுடன் போலீசார்... கைகோர்ப்பு
நீர்நிலைகளை பாதுகாக்க மாநகராட்சியுடன் போலீசார்... கைகோர்ப்பு
UPDATED : ஜூன் 01, 2025 05:45 AM
ADDED : மே 31, 2025 11:12 PM

சென்னை, :நம் நாளிதழ் செய்தியை அடுத்து, நீர் வழித்தடத்தில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது; லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அரசியல் அழுத்தங்களை கண்டு கொள்ளாமல் அதிரடி நடவடிக்கையை தொடர மாநகராட்சியும், காவல் துறையும் கைகோர்த்துள்ளன.
வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2 கி.மீ., நீளம், 80 அடி அகலம் உடையது. இந்த சாலை மற்றும் இதை ஒட்டிய பகுதிகள், ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ளன.
இந்த பகுதி குப்பை, மருத்துவ கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால், வேளச்சேரி சதுப்பு நிலத்திற்கு செல்லும் 100 அடி அகல நீர் வழிப்பாதையில், நீரோட்டத்தை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கழிவுநீர் கொட்டிய லாரி குறித்து, மே 29ல், நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவுப்படி, கழிவுநீர் கொட்டிய லாரி குறித்து, அதிகாரிகள் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள, டி.என்: 23 எ 3939 எண் உடைய குடிநீர் லாரி என்பதும், பெருங்குடியைச் சேர்ந்த கனகராஜ், 40, என்பவர் ஓட்டுவதும் தெரிய வந்தது.
லாரியை கழிவுநீர் ஏற்ற பயன்படுத்துவதும், லாரியை கழுவிய பின், குடிநீர் நிரப்பி வினியோகிப்பதும் தெரிந்தது. லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொது சொத்தை சேதப்படுத்தியது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி, தொற்று நோய் பரவும் வகையில் செயல்பட்டது
தொடர்ச்சி ௪ம் பக்கம்
போன்ற பிரிவுகளின் கீழ், லாரி ஓட்டுநர் கனகராஜை கைது செய்தனர். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.
லாரி உரிமையாளர், இமாச்சல் மாநிலம், சிம்லாவில் இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை திரும்பியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கழிவுநீர் மற்றும் கட்டட கழிவு கொட்ட, சென்னை மாநகராட்சி எல்லையில் தனி இடம் உள்ளது. இருந்தும் சிலர், நீர்வழித்தடம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதியில் கொட்டுகின்றனர்.
இதற்கு, போலீசில் புகார் அளித்தால் வாங்க மறுக்கும் சூழல் இருந்தது. போலீஸ் கமிஷனரிடம் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. போலீசார் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்வர்.
பொது இடத்தில் கழிவுநீர், கழிவுகளை கொட்டினால், வாகன பறிமுதல் மட்டுமின்றி, ஓட்டுநரும், உரிமையாளரும் சிறை செல்வதை தவிர வேறு வழியில்லை. அரசியல் தலையீட்டை கண்டுகொள்ளாமல், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புகார் தாருங்கள்
அரசு சொத்தை ஆக்கிரமித்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல், நோய் பரப்பும் வகையில் பொது இடங்கள், நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கொட்டுதல் ஆகியவை சட்டப்படி குற்றம். இதுகுறித்து, பொதுமக்கள், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள், அந்தந்த காவல் நிலையத்தில் புகார் தரலாம். உடனே வழக்குப்பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
- போலீஸ் உயர் அதிகாரி
நடவடிக்கை தொடரணும்
நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமிக்கும் வகையில், சிலர் கழிவுகளை கொட்டுகின்றனர். இவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஆதரவு தருகின்றனர். தற்போது, தடைகளை தகர்த்து, கழிவு கொட்டும் லாரிகளை பறிமுதல், கைது நடவடிக்கைக்கு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். இதுபோல், அனைத்து பகுதிகளிலும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிர்வாகிகள்,
வேளச்சேரி குடியிருப்போர் நல சங்கம்