/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு 12வது முறையாக மக்கள் சாலை மறியல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் வலியுறுத்தல்
/
தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு 12வது முறையாக மக்கள் சாலை மறியல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் வலியுறுத்தல்
தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு 12வது முறையாக மக்கள் சாலை மறியல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் வலியுறுத்தல்
தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு 12வது முறையாக மக்கள் சாலை மறியல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 12:12 AM

தரமணி, குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பான பிரச்னைக்கு, 12வது முறையாக, தரமணி 200 அடி அகல சாலையில் அமர்ந்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி, பெரியார் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட தெருக்களில், மூன்று மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.
குடிநீர் வாரிய அதிகாரிகள், தெரு குழாய்களை ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவதும், இரவு நேரத்தில் திருட்டு இணைப்பு எடுக்க பள்ளம் தோண்டும்போது, குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலப்பதும் தெரிந்தது.
விடுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த, 137 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருந்தும், குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்ந்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது. பகுதிமக்கள், 11 முறை சாலை மறியல் செய்துள்ளனர். நேற்று முன்தினம், தெருவில் நின்று போராட்டம் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்றும் தரமணி 200 அடி அகல சாலையில் அமர்ந்து, 12வது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவசர சிகிச்சைக்கு சென்ற நோயாளியின் உறவினர், பேருந்து நடத்துனர் உள்ளிட்டோர், போராட்டக்காரர்களிடம் வழிவிடுமாறு கோரினர். அதற்கு போராட்டக்காரர்கள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.
பின், தரமணி போலீசார் வந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தரமணி 200 அடி சாலையில், பீக் ஹவர்ஸ் நேரத்தில் கடுமையான நெரிசல் ஏற்படும். இந்த நேரத்தில், மறியல் செய்வதால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
குடிநீரில் துர்நாற்றம் வீசினால், முன்னறிவிப்பு இல்லாமல், 200 அடி சாலையில் அமர்ந்து மறியல் செய்கின்றனர். நாங்கள் செல்வதற்குள், நெரிசல் அதிகரிப்பதுடன், வாகன ஓட்டிகளுடன் தகராறு, கைகலப்பு ஏற்படுகிறது.
அடிதடி உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்பட்டால், பிரச்னை வேறு திசையில் சென்றுவிடும். தேர்தல் நாள் வரை இதே பிரச்னை நீளும் என தெரிகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தலையிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சிகளும் பகுதி மக்களை துாண்டி விடாமல், பிரச்னைக்கான தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பகுதி பிரச்னையால், சாலையில் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்து, அனைவரும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

