ADDED : ஜன 31, 2025 12:17 AM
வளசரவாக்கம், மதுரையைச் சேர்ந்தவர் முத்து பாண்டி. இவர், விருகம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிகிறார்.
கடந்த 26ம் தேதி 'மெத் ஆம்பெட்டமைன்' விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்களை, காப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஜாஸ்வீர், 34, என்பவரை பார்ப்பதற்கு அவரது மனைவி வந்தபோது, அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, சிறப்பு எஸ்.ஐ., வினோ தட்டிக்கேட்டார். அப்போது, முத்துபாண்டிக்கும் வினோவிற்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து, 27ம் தேதி இரவு காரம்பாக்கம் சோதனை சாவடியில் பணியில் இருந்த முத்துபாண்டியிடம், ரோந்து பணியில் இருந்த உதவி கமிஷனர் விசாரித்தார். ஆனால், முத்துபாண்டி சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வார விடுப்பு எடுத்து சென்ற முத்துபாண்டி, சேத்துப்பட்டு விளையாட்டு திடலில் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை முயன்றுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.