/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் கட்டிப்புரண்டு சண்டை கால் உடைப்பு: பின்னணி என்ன?
/
போலீசார் கட்டிப்புரண்டு சண்டை கால் உடைப்பு: பின்னணி என்ன?
போலீசார் கட்டிப்புரண்டு சண்டை கால் உடைப்பு: பின்னணி என்ன?
போலீசார் கட்டிப்புரண்டு சண்டை கால் உடைப்பு: பின்னணி என்ன?
ADDED : பிப் 06, 2025 12:35 AM
சென்னை,பணியிட மாறுதல் பெற்று தந்ததாக பணம் கேட்டு, போலீஸ்காரர் ஒருவரை, மூன்று போலீசார் இடைமறித்து, கட்டிப்புரண்டு சண்டை போட்டு, அவரின் கால் எலும்பை முறித்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ரங்கநாதன், 39. சென்னை புதுப்பேட்டை நாராயணன் நாயக்கன் தெருவில் வசிப்பவர் சுந்தர்ராஜன், 38.
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ஆனந்த், 33. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வள்ளி நகரைச் சேர்ந்தவர் மணிபாபு, 30; நால்வரும் போலீஸ்காரர்கள்.
இவர்கள், 10 ஆண்டுகளாக, சென்னை புதுப்பேட்டையில், ஆயுதப்படையில், மோட்டார் வாகனப்பிரிவில் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில், ரங்கநாதன் பணியிட மாறுதலுக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது, இவருடன் பணிபுரியும் சுந்தர்ராஜன், 'எனக்கு தெரிந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் சொல்லி, உங்களுக்கு மாமூல் அதிகம் வரும் நல்ல காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுத் தருகிறேன்' என்று கூறியுள்ளார். இதற்காக, ரங்கநாதனிடம் சில ஆயிரங்களையும் கறந்துள்ளார்.
இந்நிலையில், ரங்கநாதனின் முயற்சிக்கு பலனாக, சென்னை திருவல்லிக்கேணி சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில், ரோந்து பணியில் ஈடுபடும் ஜிப்சி வாகன ஓட்டுநராக பணியிட மாறுதல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:10 மணியளவில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, மோட்டார் வாகனப்பிரிவு செயல்படும் இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் ரங்கநாதன் வந்துள்ளார்.
அவரை, மற்ற போலீஸ்காரர்கள் ஆனந்த், சுந்தர்ராஜன், மணிபாபு ஆகியோர் இடை மறித்துள்ளனர்.
அப்போது, 'உனக்கு பணியிட மாறுதல் கிடைக்க நான் தான் ஏற்பாடு செய்தேன்; அதற்கான பணத்தை கொடுக்காமல், இந்த இடத்தை விட்டு நீ போக முடியாது' என, சுந்தர்ராஜன் மிரட்டல் தொணியில் பேசியுள்ளார்.
இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சுந்தர்ராஜனுக்கு ஆதரவாக மணிபாபு, ஆனந்த் ஆகியோரும் பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் ரங்கநாதன், சுந்தர்ராஜன் ஆகியோர் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
இவர்களை விலக்கி விடுவது போல வந்த ஆனந்த், மணிபாபு ஆகியோரும், சுந்தர்ராஜனுடன் சேர்ந்து ரங்கநாதனை கடுமையாக தாக்கி உள்ளனர்.
அங்கு கழற்றி வைக்கப்பட்டு இருந்த வாகன இருக்கைகளை எடுத்து, ரங்கநாதன் மீது வீசியுள்ளனர்.
இதனால், ரங்கநாதனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, வலியால் துடித்துள்ளார். சுந்தர்ராஜன் காலைப் பிடித்து முறித்ததாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த ரங்கநாதன், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால், வழக்கு ஏதும் பதிவு செய்யாமலும், ரங்கநாதனிடம் தகராறு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது, மற்ற போலீசாரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.