/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு... தொடர் சரிவு! 70 சதவீத இலக்குடன் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
/
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு... தொடர் சரிவு! 70 சதவீத இலக்குடன் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு... தொடர் சரிவு! 70 சதவீத இலக்குடன் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு... தொடர் சரிவு! 70 சதவீத இலக்குடன் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ADDED : மார் 10, 2024 12:11 AM

தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட தலைநகரான சென்னையில், கடந்த பொது தேர்தல்களில் ஓட்டுப்பதிவு படிப்படியாக குறைந்து பதிவாகி வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை, குறைந்தபட்சம் 70 சதவீதமாக உயர்த்தும் இலக்குடன் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய, மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதே போல, 16 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
வடசென்னை லோக்சபா தொகுதியில், திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னையில் சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியும் கூடுதலாக இணைந்துள்ளன.
இதனால், சென்னை மாவட்டத்தில், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள், லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 4,676 ஓட்டுச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், சென்னைக்கு உட்பட்ட மூன்று லோக்சபா தொகுதிகளில் 59 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. அதைத் தொடர்ந்து, 2021 சட்டசபை தேர்தலில், மாநிலம் முழுதும் 71.79 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஆனால், தலைநகர் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தமாக 59.40 சதவீதம் மட்டுமே பதிவானது. அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாவட்டத்தில், 43.65 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாயின.
சென்னையில் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஓட்டு சதவீதம் குறைவதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக, தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் வருமாறு:
ஆளும் அரசுகளின் மீதான அதிருப்தி மற்றும் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில், பெரும்பாலானோர் ஓட்டளிக்க முன் வருவதில்லை
குறிப்பிட்ட தொகுதிகள், தொடர்ந்து தனி தொகுதிகளாக இருப்பதால், அங்கு இதர சமூக வாக்காளர்கள் ஓட்டு அளிக்க விரும்புவதில்லை
'என் ஒரு ஓட்டு, யாரை வெற்றி பெற வைக்க போகிறது; என்ன மாற்றம் ஏற்பட போகிறது' என்பதே பெரும்பாலான வாக்காளர்களின் மனநிலையாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் கிடைக்கும் பொது விடுமுறையை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தி கொள்ளுதல்
வசதி படைத்தோரில் பெரும்பாலானோர் ஓட்டளிக்காமல் இருப்பதால், தாங்கள் எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும் என்பதும் தெரியாமல் உள்ளனர்
வாடகை வீட்டில் இருப்போர், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்லும்போது, வாக்காளர் அடையாள அட்டையை அங்கு மாற்றி கொள்ளாததால், தேர்தலில் பழைய தொகுதிக்கே சென்று ஓட்டளிக்க வேண்டியுள்ளது. இதனால், பலரும் ஆர்வம் காட்டுவதில்லை
நீர்நிலையோரம் வசித்தவர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கையின் கீழ் அரசின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அப்படி செல்லும்போது, தங்களது வாக்காளர் அட்டையை புதிய இடத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளாததால் அவர்களால் ஓட்டளிக்க முடியவில்லை
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் தொடர்ந்து சரிந்து வருவதாக தெரியவந்து உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுப்பதிவை அதிகரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கைஎடுக்கிறது.
ஆனால், சென்னையை பொறுத்தவரை, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவதை தடுப்பதே பெரும் முயற்சியாக மாறியுள்ளது.
தேர்தலில் சென்னை மாவட்டத்து மக்களின் ஆர்வமின்மைக்கு காரணங்கள் குறித்த ஆய்வு செய்த அதிகாரிகள், ஓட்டுப்பதிவு சதவீத த்தை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் 70 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நிர்ணயித்து பணியாற்றி வருவதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வசதிப்படைத்தவர்கள் வாழும் இடங்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் ஆகியவற்றில், மக்களிடம் தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு அதிகரிப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளன. ஆனால், இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தல்படி, வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு வாக்காளரும், வரும் தேர்தலில் தங்களுக்கு ஓட்டு உள்ளதா; எந்த ஓட்டுச்சாவடியில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், தேர்தலின் போது எவ்வித சிரமமும் இன்றி ஓட்டளிக்க முடியும். யாருக்கு ஓட்டுபோட வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.
ஆனால், கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தற்போது எடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம், கடந்த தேர்தலை விட, வரும் தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

