/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 11, 2025 12:41 AM
மடிப்பாக்கம்: மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது பொன்னியம்மன் கோவில். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், கடந்த பல மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. அதை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி முதல் யாகசாலை வளர்த்து கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம், விமான கலச ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல், ஐந்தாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை, ஆறாம் கால யாகசாலை, மகாபூர்ணாஹுதி, யாத்ராதானம், கடப்புறப்பாடு நடந்தது.
காலை 9:30 மணிக்கு, விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, விநாயகர், சப்தகன்னிமார், மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பொன்னியம்மனின் அருளைப் பெற்றனர். பின், அன்னதானம் நடந்தது. நேற்று மாலை பொன்னியம்மன் உற்சவமூர்த்தி பிரஹார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் 25ம் தேதி வரை, மண்டலாபிஷேகம் நடத்தப்படுகிறது.

