/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.92.72 லட்சம் கையாடல் செய்த தபால் முகவர், கணவருக்கு 5 ஆண்டு
/
ரூ.92.72 லட்சம் கையாடல் செய்த தபால் முகவர், கணவருக்கு 5 ஆண்டு
ரூ.92.72 லட்சம் கையாடல் செய்த தபால் முகவர், கணவருக்கு 5 ஆண்டு
ரூ.92.72 லட்சம் கையாடல் செய்த தபால் முகவர், கணவருக்கு 5 ஆண்டு
ADDED : ஜன 08, 2024 01:36 AM
சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக, முதலீடுகளை மோசடி செய்து தபால் துறைக்கு 92.72 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்திய வழக்கில், பெண் முகவர், அவரது கணவருக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாம்பரம் தபால் நிலையங்கள் பிரிவு மூத்த கண்காணிப்பாளர் குப்புசாமி. இவர், 2012 டிச., 20ல், சென்னை சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதில், 'திருவொற்றியூர் கிளை தபால் நிலையத்தில், 1991 ஜன., 25 முதல் பி.பி.எப்., எனும் பொது வருங்கால வைப்பு நிதி வசூலிக்கும் அதிகாரப்பூர்வ முகவராக அமிர்தாம்பாள், 70, என்பவர் செயல்பட்டு வந்தார்.
'இவர், திருவொற்றியூர் தபால் நிலைய துணை போஸ்ட் மாஸ்டர் அசோக்குமார், 65, உதவி துணை போஸ்ட் மாஸ்டர் மணி, 69, தபால் உதவியாளர் கல்யாணி, சாந்தி உள்ளிட்ட பலர் இணைந்து, சேமிப்பு மற்றும் பி.பி.எப்., கணக்கில் முதலீடு செய்த பலரின் கணக்குகளில் இருந்த பணத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக முறைகேடு செய்துள்ளனர்.
'எனவே, மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
13 பேர் மீது வழக்கு
புகார் குறித்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், போலி ஆவணங்கள், முதலீட்டாளர்களின் கையெழுத்தை போட்டு, 92 லட்சத்து 72,805 ரூபாய் வரை, தபால் துறைக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, அமர்தாம்பாள், அவரது கணவர் நாராயணா, 77, தபால் துறை ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தபால் உதவியாளர்கள் குமார், கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தனர்.
வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 12வது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர்வாலண்டினா முன் நடந்து வந்தது.
சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமிர்தாம்பாள், 2007 முதல் 2012 வரை பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். கணவருடன் இணைந்து, தபால் நிலையத்தில் முதலீடு செய்த அப்பாவிகளின் பணத்தை கையாடல் செய்துள்ளனர்.
மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை வாயிலாக, முதலீட்டாளர்கள் கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்களை மாற்றி, அமிர்தாம்பாள் எவ்வாறு மோசடியில் ஈடுபட்டார் என்பது தெரியவருகிறது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எனவே, இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக மொத்தம் ஒரு கோடியே 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் விதிக்கப்படுகிறது.
இறந்தவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற ஒன்பது பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது