/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் பல் துறை பணிகள் அறுபடும் கேபிளால் மின் தடை
/
ஓ.எம்.ஆரில் பல் துறை பணிகள் அறுபடும் கேபிளால் மின் தடை
ஓ.எம்.ஆரில் பல் துறை பணிகள் அறுபடும் கேபிளால் மின் தடை
ஓ.எம்.ஆரில் பல் துறை பணிகள் அறுபடும் கேபிளால் மின் தடை
ADDED : அக் 07, 2024 02:10 AM

சோழிங்கநல்லுார்:பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள் அதிகமாக உள்ளன. இதனால், மின் வினியோகம் சீராக இருக்க வேண்டும்.
ஆனால், கேபிள் பழுது காரணமாக, பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, கண்ணகி நகர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் தடத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
சோழிங்கநல்லுார் ஆவின் துணை மின் நிலையத்தில் இருந்து, ஓ.எம்.ஆர்., அணுகு சாலை வழியாக, மின் கேபிள் செல்கிறது. இந்த கேபிளில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
ஒரு இடத்தில் பழுதானால், அதை கண்டுபிடித்து பள்ளம் தோண்டி பழுதை சீரமைக்க, 12 முதல் 15 மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை, மின் தடை பகுதிக்கு இதர துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கப்படுகிறது. ஆனால், இரவில் அப்படி வழங்கும்போது, மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடிப்பு, மின்பகிர்மான பெட்டி தீ பிடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. சீரான மின்வினியோகம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர்.
பொறியாளர் பற்றாக்குறை
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஓ.எம்.ஆரில் வினியோகிக்க தேவையான மின்சாரம் வருகிறது. ஆனால், அடிக்கடி ஏற்படும் கேபிள் பழுதால் சீரான மின் வினியோகம் வழங்க முடியவில்லை. கேபிள் பழுதுக்கு, மெட்ரோ ரயில் பணி, குடிநீர், கழிவுநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள், எரிவாயு குழாய் பதிப்பு போன்றவற்றில், ஏதாவது ஒரு பணி காரணமாக உள்ளது. பழுதை கண்டுபிடித்து உடனே சரிசெய்ய போதுமான பொறியாளர்கள் இல்லை. இதனால், மின் வினியோகம் சீராக, பல மணி நேரமாகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.