/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதை வடம் பதிக்கும் பணியால் மின்வெட்டு
/
புதை வடம் பதிக்கும் பணியால் மின்வெட்டு
ADDED : ஏப் 19, 2025 11:56 PM

திருவேற்காடு, ஆவடி அடுத்த, திருவேற்காடு பகுதியில், 230 கி.வா., மின்சார கேபிள் பதிக்கும் பணி, இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, திருவேற்காடு சிவன் கோவில் பிரதான சாலையில் நடந்த இப்பணியால், சாலை பாதியாக சுருங்கி, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் திருவேற்காடு, சிவன் கோவில் சாலை, வள்ளி கொள்ளை மேடு பகுதியில், இரு தினங்களாக புதை வடம் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக இரண்டு 'பொக்லைன்' இயந்திரங்களுடன், 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாலையில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், இப்பணியின் போது, சாலையில் ஏற்கனவே புதைக்கப்பட்டு இருந்த மின் புதைவடம் சேதமடைந்தது. இதனால், கடந்த இரு தினங்களாக நள்ளிரவு 12.30 மணியளவில், ஆறு முறை மின்வெட்டு ஏற்பட்டது. தொடர் மின்வெட்டால் பகுதிவாசிகள் உஷ்ணத்தில் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து பகுதிவாசி கார்த்திக், 24 என்பவர் கூறியதாவது :
இரு தினங்களாக இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மின்வெட்டால் அனைவரும் உறக்கமின்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து புகார் அளித்தால், அதிகாரிகள் எந்த பதிலும் சொல்வதில்லை. எனவே, பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படாதவாறு புதை வடம் பதிக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட வேண்டும்.