/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி கர்ப்பிணிகள் அவதி
/
ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி கர்ப்பிணிகள் அவதி
ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி கர்ப்பிணிகள் அவதி
ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி கர்ப்பிணிகள் அவதி
ADDED : நவ 18, 2024 02:28 AM

ராயபுரம்:ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனை, 1914 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை, 74 படுக்கைகள், 46 பணியாளர்களுடன் செயல்பட துவங்கியது. 2021 முதல், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு, தற்போது, 610 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை மட்டுமின்றி, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் இருந்தும் பெண்கள் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர். மாதந்தோறும் 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
சென்னையில், குழந்தை பிறப்பு விகிதத்தில், ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.
அதிகளவில் குழந்தை பிறப்பு இருக்கும் மருத்துவமனையில், பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. படுக்கைகள் பற்றாக்குறையால், குழந்தை பெற்ற பெண்கள், தரையில் படுக்கும் நிலை உள்ளது. குழந்தை பெற்ற பெண்களுடன் தங்குவோருக்கு, போதிய கழிப்றை, குடிநீர் வசதி இல்லை.
கட்டடத்தில் உட்புறம், வெளிபுற சுவர்களில் காரை பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது.
பிரசவத்திற்காக சேர்க்கப்படும் பெண்கள், மருத்துவனையில் தங்கியிருக்க நேரிடுவதால், அவர்களை பார்த்துக்கொள்ள குடும்பத்தினர் உடன் வருவது வழக்கம். அவர்கள் தங்குவதற்கு வசதி இல்லாததால், தரையில் அமர்ந்து சாப்பிடும், துாங்கும் நிலை உள்ளது. இதனால், சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.
மருத்துவமனை வளாகத்தில், பெரியளவில் அபாயகரமான பள்ளம் உள்ளது. இதில், கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் தொற்று நோய் அபாயம் உள்ளது.
ஏழை எளிய மக்களே அதிகம் வரும் ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில், அவர்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் செயல்படுகிறது. ஆனால், உணவகத்தின் கூரைகள் உடைந்தும், தரைகள் பெயர்ந்தும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றியும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
எனவே, ஏழை மக்கள் வந்து செல்லும் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நவீனப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.