/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊழியர்களை தடுப்பதால் நாய்கள் பிடிப்பதில் பாதிப்பு
/
ஊழியர்களை தடுப்பதால் நாய்கள் பிடிப்பதில் பாதிப்பு
ADDED : செப் 06, 2025 02:37 AM

சென்னை : ''நாய்களை பிடிக்கச் செல்லும் மாநகராட்சி ஊழியர்களை, விலங்கு மற்றும் சமூகநல ஆர்வலர்கள் போர்வையில் இருப்பவர்கள் தடுப்பதால் பணிகள் பாதிக்கின்றன. இப் பிரச்னையில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என, நாய் இன கட்டுப்பாட்டு மைய உதவி டாக்டர் தயாநிதி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
தெருநாய்கள் தொடர்பான நடவடிக்கைகள் பேசுபொருள் ஆகியுள்ளது. சென்னையில் உள்ள அரசு நாய் கருத்தடை மையங்களில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப் படுகிறது.
'தெருநாய்களை பிடிக்கச் செல்லும் மாநகராட்சி ஊழியர்களை, சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருப்பவர்கள் தடுப்பதால், பணிகள் பாதிக்கின்றன.
'இப்பிரச்னையை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புரிந்து கொண்டு, நாய்கள் கருத்தடை முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்' என, அரசு கால்நடை டாக்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, சென்னை கண்ணமாபேட்டை, நாய் இன கட்டுப்பாட்டு மைய உதவி டாக்டர் தயாநிதி கூறியதாவது:
பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், நாய்களை பிடிக்க ஊழியர்கள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது, விலங்கு நல ஆர்வலர் அல்லது சமூக ஆர்வலர் ஆகியோர், நாய்களை பிடிக்க விடாமல் தடுக்கின்றனர்.
மேலும், அரசியல் பிரமுகர்களையும் தங்களுக்கு உதவியாக இதில் ஈடுபடுத்துகின்றனர்.
அதேபோல், மாநகராட்சி பிடிக்கும் நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவதை, அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. ஆனால், பிடிக்கும் நாய்களை கருத்தடை செய்து, மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என, நீதிமன்றம் சொல்கிறது.
இப்படி பல பிரச்னைகளை நாங்கள் எதிர் கொள்கிறோம். இதனால், இந்த பணிகள் பாதிப்பும், காலதாமதமும் ஏற்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். எனவே, மக்கள், விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.