/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறை கைதி மரணம்: உறவினர்கள் முற்றுகை ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு
/
சிறை கைதி மரணம்: உறவினர்கள் முற்றுகை ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு
சிறை கைதி மரணம்: உறவினர்கள் முற்றுகை ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு
சிறை கைதி மரணம்: உறவினர்கள் முற்றுகை ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு
ADDED : பிப் 20, 2026 06:53 AM

சென்னை: புழல் மத்திய சிறையில் திடீரென மயங்கி விழுந்த கைதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள், மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தாம்பரம், திருநீர்மலை சாலை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் புனிதன் என்கிற கெல்வின், 29. கடந்த 2020ல் வழிப்பறி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அவரை கைது செய்த சங்கர் நகர் போலீசார், கெல்வினை புழல் சிறையில் அடைக்கும் முன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து 13ம் தேதி புழலில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் அடைத்தனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து, புழல் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு, சிறையில் மயங்கி விழுந்துள்ளார். போலீசார் அவரை, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணிக் கு திடீரென உயிரிழந்தார்.
கெல்வின் உயிரிழந்தது குறித்த தகவல் அறிந்து, அவரது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஸ்டான்லி மருத்துவமனையில் திர ண்டனர்.
'கெல்வினின் இறப்பை கண்டித்தும், கைது செய்யப்படும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கெல்வினை எப்படி சிறையில் அடைக்கலாம்' எனக் கூறியும் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டினர்.
தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார், அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து, சமாதானமாகி, உடலை வாங்கி கலைந்து சென்றனர். கெல்வினின் இறப்பு குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண் கைதி பலி? புழல் மகளிர் சிறையில் 40 வயது பெண் கைதியும் நேற்று இறந்ததாக கூறப்படுகிறது.

