/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வெளிவட்ட சாலையை பராமரிப்புக்கு தனியார் நிறுவனம்
/
சென்னை வெளிவட்ட சாலையை பராமரிப்புக்கு தனியார் நிறுவனம்
சென்னை வெளிவட்ட சாலையை பராமரிப்புக்கு தனியார் நிறுவனம்
சென்னை வெளிவட்ட சாலையை பராமரிப்புக்கு தனியார் நிறுவனம்
ADDED : ஆக 12, 2025 12:30 AM
சென்னை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பராமரிக்கும் பொறுப்பை, தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்த நிறுவனம், செப்., 19ல் தேர்வு செய்யப்பட உள்ளது.
சென்னை, எண்ணுார் உள்ளிட்ட துறைமுகங்களுக்கும், வர்த்தக பகுதிகளுக்கும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால், கிண்டி கத்திப்பாரா - மணலி இடையிலான உள்வட்டச்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வண்டலுார் - மீஞ்சூர் இடையில், 60.1 கி.மீ., வெளிவட்டச்சாலை, இரண்டு கட்டங்களாக, 2,145 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, வரதராஜபுரம், கோலப்பன்சேரி, பாலவேடு, சின்ன முல்லைவாயில் ஆகிய, நான்கு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
கடந்த 2021ல் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, சுங்க கட்டணம் வசூலிக்கும் பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கவில்லை.
அதன்பின், தி.மு.க., ஆட்சியில், நான்கு சுங்கச்சாவடிகளிலும் கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு, 135 ரூபாய்; கனரக வாகனங்களுக்கு, 220 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன்வாயிலாக, ஆண்டுதோறும் 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலை பராமரிப்பு மற்றும் சுங்க கட்டணம் வசூல் பணியை, 2,000 கோடி ரூபாய்க்கு, 25 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச்சாலை பராமரிப்புக்கான ஒப்பந்த நிறுவனம் தேர்வு, செப்., 19ல் நடக்க உள்ளது. இது, அரசின் கொள்கை முடிவு,'' என்றார்.
தனியாருக்கு விற்பதா? ''பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்கும், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இப்போது, தமிழக மக்களுக்கு சொந்தமான சொத்துக்களை, தனியாருக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறார். வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில், 25 ஆண்டுகளில், 45,000 கோடி ரூபாய் வரை, சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை, வெறும் 2,000 கோடி ரூபாய்க்கு ஏலம் விடுவது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். இதன் பின்னணியில் என்ன பேரம் நடந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். வெளிவட்டச் சாலையை, தனியாருக்கு விற்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். - அன்புமணி, பா.ம.க., தலைவர்.