sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காதல் பரிமாணங்களை காட்டிய பிரியதர்ஷினி

/

காதல் பரிமாணங்களை காட்டிய பிரியதர்ஷினி

காதல் பரிமாணங்களை காட்டிய பிரியதர்ஷினி

காதல் பரிமாணங்களை காட்டிய பிரியதர்ஷினி


ADDED : டிச 27, 2024 12:46 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரந்தரதாசர் கன்னடத்தில் இயற்றிய, ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த 'கஜவதனா பேதவே கவுரி தனயா' என்ற கிருதியுடன், கிருஷ்ண கான சபாவில் ஆரம்பித்தது கலைமாமணி பிரியதர்ஷினி கோவிந்த் நாட்டியம்.

தஞ்சை நால்வர் அருளிய திச்ர ஏக அலாரிப்புடன் நடனமாடினார். இரண்டாம் காலத்திலும், மூன்றாம் காலத்திலும் அடவுகளில் வித்தியாசம் காட்டியது அருமை. 'கண்ணா, மானிடம் நீ அன்பாய் இருந்து உணவளிக்கிறாய், மயில் உன்மேல் அன்பு கொண்டு தன் தோகையை உன் மணிமகுடத்தில் சூடத்தருகிறது. ஆனால், நீ இன்னும் என் மனம் அறியாதது ஏனோ?' என சோகம் கொள்கிறாள்.

இதை, லால்குடி ஜெயராமன், சாருகேசி ராகம், ஆதி தாளத்தில் இயற்றிய 'இன்னும் என் மனம் அறியாதவர்போல் இருந்திடல் நியாயமா' என்ற வர்ணத்திற்கு ஏற்ப, தன் காதலை அபிநயத்தில் வெளிப்படுத்தினார் பிரியதர்ஷினி. அடுத்ததாக, கிருஷ்ணரின் லீலைகளை அலட்டல் இன்றி நடனத்தில் தெரிவித்தார்.

பூதகியிடம் பாலுண்டு அவளை வதைத்தது, சக்கரமாய் மாறிவந்த அரக்கனை சம்ஹாரம் செய்தது, மலையை சுண்டு விரலால் துாக்கி மழை, பெருவெள்ளத்தில் இருந்து மக்களை காத்தது போன்ற லீலைகளை சுட்டிக்காட்டினார்.

இதில், 'பிரிவிலாத நெஞ்சம்' எனும் வரியில் 'ஏ கிருஷ்ணா, கோபாலா, என்னை விட்டு பிரியாதே, இந்தப் பிரிவில்லாத நெஞ்சத்தை எனக்கு தா' என கெஞ்சுவதிலும் அழகுகாட்டினார்.

இதன் வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம், சாஹித்யங்களுக்கு தட்டிமெட்டு ஆடுவதற்கு மிக எளிமையாக இருக்கும்; ஆதி தாளத்திற்கு 'தகதிமி'யில் ஆரம்பித்து தை தை திதி தையில் முடிப்பர். ஆனால் இங்கு, ஒவ்வொரு வரிக்கும் தட்டிமெட்டு அடவுகள் விதவிதமாக கோர்த்து ஆடியது, ஆச்சரியப்பட வைத்தது.

அடுத்ததாக, காதலைப் பற்றிய 'அமரு சதகம்' நுாலில் இருந்து 'கோபிரஸ்புதாஸி' என்ற பாடலுக்கு நடனமாடினார். காதலின் ஏக்கம், துக்கம், புரிதல் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினார்.

இப்பாடல் வரிகளை கதைகளாக விவரித்தார் பிரியதர்ஷினி. 'அடர்ந்த காட்டில் புலி, சிங்கம், யானை உள்ளிட்ட விலங்குகள் இருக்கும். அதுமட்டுமின்றி காரிருள் நிறைந்திருக்கும்.

'இப்படிப்பட்ட நிலையில் தனியாக நீ எப்படி செல்வாய்' என தோழி கேட்கிறாள். அதற்கு நாயகி, 'என் மன்மதன் உடனிருக்கையில் நான் ஏன் தனியாக இருக்க போகிறேன்' என பதிலுரைக்கிறாள்.

காதலன் மீதான அளவிட முடியாத காதலில் நாயகி தவிப்பதை அழகுற காட்டி பிரியதர்ஷினி அசரடித்தார். இவருக்கு பக்கபலமாக அமைந்திருந்தது முரளி குரலிசை, அத்வைத் குழலிசை, நந்தினி வயலின், சக்திவேல் முருகானந்தம் மிருதங்கம், நட்டுவாங்கம் ஜெயஸ்ரீ ராமநாதனின் கலைநயம்.

- த.ராஜகுமாரி






      Dinamalar
      Follow us