ADDED : நவ 13, 2024 10:22 PM
சென்னை:மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக வசதிக்காக, மண்டலங்களின் எண்ணிக்கை எட்டு ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், ஏழு மண்டலங்களுக்கு உட்பட்ட, 32 பணி மனைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, 3,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகர பஸ்களை சிறப்பாக பராமரிக்கவும், இயக்குவதற்கும் ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஏழு மண்டலங்கள், எட்டு -மண்டலங்களாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, அடையாறு, குரோம்பேட்டை, வடபழனி, அயனாவரம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய ஆறு இயக்க மண்டலமாகவும், வடக்கு, தெற்கு என்னும் இரண்டு தொழில்நுட்ப மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது.
இதையொட்டி, உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிநிலைகளில் உள்ள, 20 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இயக்க பிரிவின் உதவி மேலாளர் பணியிடம், வருவாய்- வடக்கு, தெற்கு உதவி மேலாளர் என்றும் வகை மாற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.