/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.பி.சி., மையத்திற்கு ஆவடியில் எதிர்ப்பு
/
ஏ.பி.சி., மையத்திற்கு ஆவடியில் எதிர்ப்பு
ADDED : பிப் 03, 2026 06:12 AM

ஆவடி: ஆவடி கோணாம்பேடு பகுதியில், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆவடி மாநகராட்சியில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது குறித்த புகாரை அடுத்து, ஆவடி கோணாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவில், 51 லட்சம் ரூபாய் மதிப்பீடில், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு எனும் ஏ.பி.சி., மையம் கட்டப்பட்டுள்ளது. அது, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
தற்போது, சுற்றுச்சுவர், 'கிரில் ஒர்க்' மற்றும் கழிவுநீர் தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், அவர்களை பணி செய்ய விடாமல் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, ஆவடி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில், 'விலங்குகள் கருத்தடை மையம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது; எனவே ஏ.பி.சி., மையத்தை இடமாற்றம் செய்து, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்திற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
'இறக்கும் நாய்கள், இங்கு புதைக்கப்படும் என, அவர்கள் அஞ்சுகின்றனர். அப்படி ஏதும் திட்டம் இல்லை; இறக்கும் நாய்களை இங்கிருந்து அப்புறப் படுத்துவோம்; இதனால் தொற்று பரவ வாய்ப்பு இல்லை' என தெரிவித்தனர்.

