UPDATED : ஆக 20, 2026 09:39 PM
ADDED : ஆக 20, 2026 09:22 PM
சென்னை:'மாநகரில் சட்டவிரோத விளம்பர பதாகைகள், பேனர்களை அகற்ற கோரிய பொது நல வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பொது நல வழக்கை தவறாக பயன்படுத்தக் கூடாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுதும் சாலைகள், கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பரப் பலகைகள், பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரி, வடபழனியைச் சேர்ந்த, 'கேபிள் டிவி' ஆப்பரேட்டர் தேவா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், சட்டவிரோத விளம்பரப் பலகைகள், பேனர்களால் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது:
நகர் முழுதும் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என, பொதுவாக கோர முடியாது. உரிமம் பெற்ற விளம்பர பதாகைகள் இருந்தால் என்ன செய்வது?
விதிமீறல் நடந்த குறிப்பிட்ட இடங்களை சுட்டிக்காட்ட வேண்டும். பொது நல வழக்கை தவறாக பயன்படுத்தக் கூடாது.
மேலும், வழக்கு தொடரும் முன் அதிகாரிகளை அணுகியதற்கான விபரங்கள், விதிமீறல் நடந்த இடங்களின் பட்டியல், குறிப்பிட்ட விளம்பரப் பலகைகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, மனுதாரர் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
