/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில வகைப்பாடு மாற்றம் மக்கள் கருத்து கூற அழைப்பு
/
நில வகைப்பாடு மாற்றம் மக்கள் கருத்து கூற அழைப்பு
ADDED : ஆக 11, 2025 01:20 AM
சென்னை:சென்னை பெருநகர் பகுதியில், 31 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து, 21 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை பெருநகரில், புதிதாக கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட திட்டத்துக்கான வகைப்பாட்டில் நிலம் இருக்க வேண்டும்.
ஆனால், இரண்டாவது முழுமை திட்டத்தில், வரையறுக்கப்பட்ட வகைப்பாட்டுக்கு மாறாக கட்டுமான திட்டங்களை செயல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதில், ஒட்டுமொத்தமாக நில வகைப்பாடுகளை மாற்ற வழி இல்லை. எனவே, கட்டுமான திட்டங்கள் செயல்படுத்துவோர் தனித்தனியாக நில வகைப்பாடு மாற்ற கோரி விண்ணப்பிக்கின்றனர்.
இந்த வகையில் தற்போது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து, 31 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 11 விண்ணப்பங்கள், விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கோரி வந்துள்ளது.
இத்துடன், பல்லாவரம் அடுத்த திருமுடிவாக்கத்தில், நகர்மய பகுதியாக உள்ள, 82 ஏக்கர் நிலத்தை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மாற்ற கோரி, 'சிப்காட்' எனும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இது தொடர்பான வரைபடங்கள், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலக கலந்தாலோசனை மையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மீதான கருத்துகளை அடுத்த, 21 நாட்களுக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.