தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மழை பாதிப்பு விபரம்

மழை பாதிப்பு விபரம்

மழை பாதிப்பு விபரம்


UPDATED : அக் 18, 2026 06:20 PM

ADDED : அக் 18, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:20 PM ADDED : அக் 18, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்: தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரில், வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், இரவு முழுதும் துாக்கமிழந்த மக்கள், பக்கெட் மற்றும் பாத்திரங்கள் உதவியுடன், மழைநீரை வெளியேற்றினர். திருவொற்றியூர், தேரடி பூந்தோட்ட பள்ளி மைதானத்தில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

குடும்பங்கள் ஓட்டம்: கிண்டி, மசூதி காலனி 17-வது தெருவில் வேப்பமரம் முறிந்து, சிமென்ட் கூரை வேயப்பட்ட இரு வீடுகள் மீது விழுந்தது. பெரும் சத்தம் எழுந்ததால், குணா, 56, மற்றும் முகமது, 60, ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து விரைவாக வெளியேறினர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

47 மரங்கள் சாய்ந்தது

கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை, அதிக கனமழையால், 47 மரங்கள் வேருடன் பெயர்ந்து சாலையில் விழுந்தன. அவற்றை, மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி, அப்புறப்படுத்தி உள்ளனர். இதில் அண்ணா நகர் ஆர்.வி., நகர், சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

பள்ளி சுவர் இடிந்தது: ராயபுரம், மேற்கு மாதா தெருவில் உள்ள, 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி மற்றும் சர்ச்சின் 8 அடி உயரம் உடைய 20 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது. இதனால் தெருவிளக்கு கம்பங்கள் சேதமாகின; யாருக்கும் காயமில்லை.

‘பார்க்கிங்’கான மேம்பாலம்: மழையால் அச்சமடைந்த மக்கள், தங்கள் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை, ராயபுரம் மேம்பாலத்தில் ஓரம் வரிசையாக நிறுத்தி வைத்தனர். மணலிபுதுநகர் அடுத்த நாப்பாளையம் மேம்பாலத்திலும், கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

கைகொடுத்தது குளம்: 10 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட, கார்கில் நகர் குளம் முழுதும் நிரம்பி, உபரி நீர் உந்து நிலையத்திற்கு செல்கிறது. அங்கிருந்து, ராட்சத மின் மோட்டார் வழியாக, பகிங்ஹாம் கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

மூழ்கியது அரசு அலுவலகம்: நுங்கம்பாக்கம் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில், மழைநீர் தேங்கியது. மின் மோட்டார்கள் மற்றும் டிராக்டர் உதவியுடன், தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ஏரி நீர்மட்டம் உயர்வு

பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு, 1,105 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி ஏரியின் கொள்ளளவு, 1.38 டி.எம்.சி.,யாகவும், நீர்மட்டம் 14.21 அடியாக உயர்ந்துள்ளது.

7 மணி நேரம் மின்வெட்டு: திருவேற்காடு, 15வது வார்டு சண்முகா நகரில், சாலையோர ராட்சத மரம், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வேரோடு சாய்ந்து, கூவம் ஆற்றோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது.

இதில், மின் கம்பம் இரண்டாக உடைந்து, உயரழுத்த மின்கம்பி அந்தரத்தில் தொங்கியது. குறைந்தழுந்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இதனால், சண்முகா நகரில் ஏழு மணி நேரமும், வேலப்பன்சாவடி, கோ – ஆப்பரேட்டிவ் நகர், பள்ளிக்குப்பம் பகுதிகளில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்பட்டது. அதிகாலை 5:00 மணிக்கு ‘கிரேன் வரவழைக்கப்பட்டு, உடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டு புதியது நடப்பட்டது. காலை 9:00 மணிக்கு மின் விநியோகம் சீரானது.

மழையை எதிர்பார்க்கவில்லை

பருவநிலை மாற்றத்தால், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என, வானிலை ஆய்வு வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். 17 – 21ம் தேதியில் கனமழை இருக்கும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்தளவு அதிகனமழையை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் எடுக்கப்பட்டிருந்தது. துாய்மை பணியாளர்கள் உட்பட மாநகராட்சி முழுதும், 15,000 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

காலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பலவீனமான கட்டங்களில் மக்கள் வசிப்பதை தவிர்த்து, நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும். நீர்நிலைகளில் வீடியோ எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் செல்லக்கூடாது.

– சமீரன்,

கமிஷனர்,

சென்னை மாநகராட்சி

பதற்றம் வேண்டாம்

வடகிழக்கு பருவமழையின் ஒட்டுமொத்த சராசரியே, 69 செ.மீ., ஆனால், பாரிமுனையில் 35.8 செ.மீ., திருவொற்றியூரில், 32.1 செ.மீ., என, பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேக வெடிப்பு ஏற்பட்டதா என ஆய்வு செய்து வருகிறோம். வேளச்சேரிக்கு ஆறு படகுடன், மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் பதற்றமடைய வேண்டாம். மழை பாதிப்பு குறித்து, ‘1913’ என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 15,000 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேக வெடிப்பு எனும் நிலையை புதிதாக எதிர்கொள்கிறோம்.

–ஆதவ் அர்ஜூனா

அமைச்சர்,

விளையாட்டு துறை

நேற்று காலை 6:00 மணி


மழை பொழிவு விபரம்
இடங்கள் மழை பதிவு அளவு – செ.மீ.,
பாரிமுனை 36.3
கத்திவாக்கம் 34.4
மீனம்பாக்கம் 28.5
சென்ட்ரல் 27.4
திருவொற்றியூர் 22.4
எண்ணுார் 21.5
கார்கில் நகர் 19.2
சிமெண்ட் சாலை 17.9
சைதாப்பேட்டை 17
தண்டையார்பேட்டை 16.6
வடபழனி 16.4
பேசின்பிரிட்ஜ் 15.4
நுங்கம்பாக்கம் 15
புதுப்பேட்டை 14.2
ஐஸ்அவுஸ் 13.8
ஆலந்துார் 13.7
காரணேசன் நகர் 13.6
மாதவரம் 12.6
மணலி 12.4
மணலிபுதுநகர் 12.1
வளசரவாக்கம் 12.1
சாலிகிராமம் 12.1
- மடிப்பாக்கம் 12
* சராசரி 10 செ.மீ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us