/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதனஞ்சேரி ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
/
ஆதனஞ்சேரி ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 03, 2024 12:31 AM

குன்றத்துார், ஆதனஞ்சேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், மீண்டும் ஆக்கிரமிப்பு நடப்பதை தடுக்க, அங்கு துார் வாரி கரை அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், ஆதனஞ்சேரி ஏரி அமைந்துள்ளது.
படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை பயன்படுத்தி, 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் இந்த ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து கடைகள், உணவகம் கட்டடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த 2015ல், ஆதனஞ்சேரி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நான்கு வீடுகள், 16 கடைகள், ஒரு உணவகம் ஆகியவற்றை இடித்து அகற்றி, 9 ஏக்கர் ஏரி நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
அதன் பின், ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், கரை அமைக்கவில்லை.
இதனால், இந்த நிலத்தில் அம்மன் சிலை வைத்தும், சிறு கடைகள் அமைத்தும், லாரிகள் நிறுத்தியும், மீண்டும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றன.
எனவே, ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றி காலியாக உள்ள ஏரி நிலத்தை துார் வாரி, அப்பகுதியில் கரை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

