/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமரச பேச்சு தோல்வி; தொடருது போராட்டம்
/
சமரச பேச்சு தோல்வி; தொடருது போராட்டம்
ADDED : செப் 25, 2025 12:34 AM
சென்னை: தொழிலாளர் நலத்துறை நடத்திய சமரச பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், எம்.ஆர்.எப்., தொழிலாளர்களின் போராட்டம், 13 நாட்களை கடந்தும் தொடர்கிறது.
சென்னை திரு வொற்றியூர், விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 61 பயிற்சியாளர்கள் உட்பட, 820 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும், ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணத்தை தந்து வந்த நிர்வாகம், இந்த முறை தர மறுத்துவிட்டது. மூன்று ஆண்டுகள் பயிற்சி தொழிலாளர்களை சேர்க்கும் வகையிலான, தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை ஏற்கும்படி, தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தரப்பில் நெருக்கடி தரப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், 13 நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்கள், நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசக் கூட்டம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், நேற்று இரண்டாவது நாளாக நடந்தது. இதில், உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.
எம்.ஆர்.எப்., தொழிலாளர் சங்க வெளி உப தலைவர் சிவபிரகாசம் கூறியதாவது:
ஏழு ஆண்டுகளாகியும், 61 பயிற்சி தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக புதிய ஆட்கள் எடுக்கப்படவில்லை. இதனால், 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிரந்தர பணி இடங்களை குறைக்கும் வகையில், என்.ஏ.பி.எஸ்., என்ற பயிற்சி தொழிலாளர் திட்டத்தை கைவிட முடியாது என, நிர்வாகம் முரண்டு பிடிக்கிறது. தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதனால், சமரச பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.
பண்டிகை காலம் என்பதால், நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. ஆனால், தொழிலாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.