ADDED : மார் 19, 2024 12:23 AM

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், தினமும் 15 எம்.எல்.டி., குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அழுத்தம் குறைவால் எர்ணாவூர் உள்ளிட்ட திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுதும், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது.
இதனால், பெண்கள், முதியோர் குடங்களுடன் தெரு தெருவாய் அலையும் அவலநிலை ஏற்பட்டது.
சில இடங்களில் குடிநீருக்காக, பல மணி நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு, பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்து, நேற்று நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுதும், அனைத்து குழாய்களிலும், நேற்று சீரான குடிநீர் வினியோகம் இருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
