/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்து வட்டியில் இருந்து மறுவாழ்வு 660 மகளிர் குழுக்களால் சாத்தியம்
/
கந்து வட்டியில் இருந்து மறுவாழ்வு 660 மகளிர் குழுக்களால் சாத்தியம்
கந்து வட்டியில் இருந்து மறுவாழ்வு 660 மகளிர் குழுக்களால் சாத்தியம்
கந்து வட்டியில் இருந்து மறுவாழ்வு 660 மகளிர் குழுக்களால் சாத்தியம்
ADDED : செப் 26, 2024 12:11 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுாரில் ஈஞ்சம்பாக்கம், பனையூர், சோழிங்கநல்லுார், கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தினக்கூலி வேலை, பூக்கடை, டிபன், காய்கறி வியாபாரம் செய்கின்றனர்.
பெரும்பாலானோர், பிள்ளைகள் படிப்பு, திருமணம், தொழில் மேம்பாட்டிற்காக வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்கின்றனர்.
மீட்டர், தண்டல், கந்துவட்டியில் 10,000 ரூபாய்க்கு மாதம் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை வட்டி கட்டி தடுமாறுகின்றனர்.
இவர்களை, கடன் பிரச்னையில் இருந்து மீட்டெடுக்க, 2017ம் ஆண்டு முதல், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 660 மகளிர் சுயஉதவி குழுக்கள் துவக்கப்பட்டன.
இதில், குறைந்த வட்டியில் சுழல்நிதி மற்றும் வங்கி கடன் வழங்குவதால், பெண்கள் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாக கூறினர்.
இது குறித்து, நகர்ப்புற வாழ்வாதார இயக்க அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு குழுவிலும், 12 முதல் 15 பேர் வரை உள்ளனர். மொத்தமுள்ள, 660 குழுக்களில், 9,980 மகளிர் உள்ளனர்.
இதில், கண்ணகி நகரில் 2,800 பேர், பெரும்பாக்கத்தில் 2,000 பேர், செம்மஞ்சேரியில் 1,700 மகளிர் உள்ளனர். மீதம், மண்டலத்தின் இதர பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு, குழுவில் உள்ள சுழல்நிதி ஒரு சதவீத வட்டியிலும், வங்கி கடன், 10,000 ரூபாய்க்கு மாதம் 55 ரூபாய் வட்டி விகிதத்திலும் வழங்கப்படும்.குழுவின் வளர்ச்சியை பொறுத்து, 12 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது; மானியமும் உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குழுவை கலைத்து, அதில் சேமித்த தொகை குழுவில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும். மீண்டும், புது குழு துவங்கி நடத்தப்படும்.
இதனால், வெளி நபர்களிடம் தொழில், படிப்பு, திருமணம், சிகிச்சைக்கு கந்து வட்டிக்கு பணம் வாங்குவது தடுக்கப்பட்டது. அவர்களது ஆர்வம், திறமையை பொறுத்து தொழிற்பயிற்சியும் வழங்குகிறோம்.
தமிழக அரசில், எந்த துறையில் மகளிருக்கான திட்டம் உள்ளதோ, அதையும் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், விபத்து, நோயால் முடங்கிய குடும்பங்கள், அதிக பயன் அடைந்து வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

