/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டான்லியில் பெண் உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை
/
ஸ்டான்லியில் பெண் உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை
ADDED : ஜன 10, 2025 12:26 AM
சென்னை,அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க, ஆறு பேர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி,சாமியார் தோட்டத்தைச் சேர்ந்த ருக்மணி, 42 என்பவர், காய்ச்சலால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் மதியம் அனுமதிக்கப்பட்டார்.
நள்ளிரவில் அவர் உயிரிழந்து விட்டதாக ஒரு டாக்டரும், உயிருடன்இருப்பதாக மற்றொரு டாக்டரும் மாறி மாறி கூறியுள்ளனர். நேற்று அதிகாலை, அந்த பெண் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரதுஉறவினர்கள் நேற்று, மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உறவினர் சத்யநாராயணன் கூறுகையில், ''வார்டில், குளுக்கோஸ் ஏற்றும்போது, உடலில் இருந்து ரத்தம், குளுக்கோஸ் பாட்டிலுக்கு சென்றது.
அதை நான் வீடியோ எடுத்தேன்; போலீசார் கட்டாயப்படுத்தி அழிக்க வைத்தனர். இறப்பு குறித்து டாக்டர்கள் மாற்றி மாற்றி கூறினர். டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததுதான் இறப்புக்கு காரணம்,'' என்றார்.
இவர்களிடம், மருத்துவமனை நிர்வாகம் சமரச பேச்சு நடத்தியபின், ருக்மணியின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து, நிலைய மருத்துவ அலுவலர் வனிதா மலர் கூறியதாவது:
ருக்மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினர். எனவே, ஆறு மூத்த டாக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
அவர்கள் அளிக்கும் பதில் மற்றும் மருத்துவ ஆவணங்கள் ஆய்வுக்குப்பின், ருக்மணி மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.