மதம் மாற்றி திருமண மோசடி வழக்கு; சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை
மதம் மாற்றி திருமண மோசடி வழக்கு; சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை
ADDED : மே 25, 2026 05:59 PM

சென்னை: 'ஹிந்துவான என்னை முஸ்லிமாக மத மாற்றம் செய்து பணமோசடி செய்ததுடன், வெளிநாட்டிற்கு தப்பிக்க முயலும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது' என, பாதிக்கப்பட்ட பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம், 33. இவர், என்னை எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்வதற்காக ஹிந்துவான என்னை முஸ்லிமாக மத மாற்றம் செய்து, என் பெயரை சபா மரியம் என, மாற்றினார். என்னிடம் இருந்து, 13 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டார்.
அவர் மீது, அரும்பாக்கம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், ராயபுரத்தில், வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு சென்றேன்.
என்னையும், என்னுடன் வந்தவர்களையும் போலீசார் அடித்து விட்டனர். பண மோசடி செய்ததுடன், என் குடும்பத்தினருடன் இருந்து என்னை பிரிந்து, நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் சையது இப்ராஹிம்.
தன் மீது வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்திருந்தும் துபாய்க்கு தப்பிச் செல்ல முயல்கிறார். அவர் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைணக்கு உத்தரவிட வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
