ADDED : ஜன 18, 2024 12:50 AM

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில் இருந்து, பெரும்பாக்கம் நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் உடையது.
ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பாதை பணி நடப்பதால், நாவலுார், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதியில் இருந்து மேடவாக்கம், சேலையூர், தாம்பரம் நோக்கி செல்வோர், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இதனால், ஆறு மாதங்களாக இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குமரன்நகர் சந்திப்பு அருகில் இந்த சாலையில், 3 அடி அகல நடைபாதை உள்ளது. இதில், வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டன.
சில கார்கள், நடைபாதையில் இருந்து இறங்கி சாலையில் நிறுத்தப்பட்டன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை.
இரவில் கார்களை ஓட்டி சாலையில் நடந்து சென்ற ஒரு முதியவர், இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.
பெரிய அளவில் விபத்து நடக்கும் முன், கார்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார், கார்கள் நிறுத்திய 'ஒர்க்ஸ் ஷாப்' நிறுவனத்திடம் பேசி, அனைத்து கார்களையும் அகற்றினர். இனிமேல் அங்கு கார்கள் நிறுத்தினால், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.