ADDED : டிச 06, 2024 12:31 AM

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட, எண்ணுார் வ.உ.சி., நகர், சத்தியவாணி முத்து நகர், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர் இடையே, 5.32 ஏக்கர் பரப்பளவில் இருந்த எண்ணுார் தாமரை குளம், ஆக்கிரமிப்பில் சிக்கி, 2 ஏக்கராக சுருங்கி விட்டது.
செல்வராஜ் குமார் என்பவர் தொடுத்த வழக்கில், 52 ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ஜனவரியில், இரு தவணைகளாக, 15 வீடுகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள், நேற்று ஈடுபட்டனர்.
இதன்படி, செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் தலைமையில், ஏழு உதவி பொறியாளர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், மூன்று பொக்லைன் வாகனம், மூன்று லாரிகள் மற்றும் இரு பாப்கட் இயந்திரங்களை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்தனர்.
இந்த நிலையில், 23 வீடுகளுக்கு பட்டா உள்ளது; இடிக்கக்கூடாது என, குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, ''தாமரை குளம், சர்வே எண், 20ல் உள்ளது. அந்த சர்வே எண்ணில் உள்ள இடங்கள் அனைத்தும் குளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை அகற்றி வருகின்றனர்; தடுப்பது சரியல்ல,'' எனக் கூறினார்.
பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர், சத்தியவாணி முத்து நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, எட்டு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
பதற்றமான சூழல் இருந்ததால், எண்ணுார் காவல் உதவி கமிஷனர் வீரகுமார், மணலி உதவி கமிஷனர் மகிமை வீரன் தலைமையில், 200க்கும்மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் படிப்படியாக அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.