/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திவாக்கம் மேம்பாலத்தில் கேமராக்கள் பொருத்த கோரிக்கை
/
கத்திவாக்கம் மேம்பாலத்தில் கேமராக்கள் பொருத்த கோரிக்கை
கத்திவாக்கம் மேம்பாலத்தில் கேமராக்கள் பொருத்த கோரிக்கை
கத்திவாக்கம் மேம்பாலத்தில் கேமராக்கள் பொருத்த கோரிக்கை
ADDED : செப் 08, 2025 06:19 AM
எண்ணுார்: அடிக்கடி விபத்து நடக்கும் கத்திவாக்கம் மேம்பாலத்தில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணுார், அன்னை சிவகாமி நகர், எர்ணாவூர் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில், கத்திவாக்கம் மூன்று முனை மேம்பாலம் உள்ளது. திருவொற்றியூரில் இருந்து, எண்ணுார் செல்வோருக்கு, இந்த மேம்பாலமே பிரதானம்.
தவிர, எண்ணுார் செல்லும் மாநகர பேருந்துகளும், இந்த மேம்பாலம் வழியாகவே செல்ல வேண்டும். இந்நிலையில், சமீபத்தில், பிராட்வே - எண்ணுார் நோக்கி செல்லும், தடம் எண்: 56எப் மாநகர பேருந்து, எதிரே தாறுமாறாக வந்த, தனியார் கல்லுாரி பேருந்துடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மாநகர பேருந்து ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.
இதேபோல, சில மாதங்களுக்கு முன், மேம்பாலத்தில் நிறுத்தியிருந்த தார்ச்சாலை அமைக்க பயன்படுத்தப்படும் 'ரோடு ரோலர்' வாகனத்தின் மீது, மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தவிர, பைக் ரேஸ் ஓட்டும் ரோமியோக்கள், மதுபோதையில், டூ - வீலரை அதிவேகமாக ஓட்டி செல்பவர்களால், அடிக்கடி மேம்பாலத்தில் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சில விபத்துகளில், துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மேம்பாலத்தில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும் என, சுற்றுவட்டார மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.