/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு? மத்திய அரசு விசாரிக்க கோரி பா.ஜ., கடிதம் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
/
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு? மத்திய அரசு விசாரிக்க கோரி பா.ஜ., கடிதம் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு? மத்திய அரசு விசாரிக்க கோரி பா.ஜ., கடிதம் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு? மத்திய அரசு விசாரிக்க கோரி பா.ஜ., கடிதம் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
ADDED : அக் 27, 2025 03:07 AM
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டுமான பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனத்திற்கு விதிமீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை வேண்டும் என, தமிழக பா.ஜ., கடிதம் எழுதியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சர்வதே அளவில், 'ராம்சார்' தளமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் கட்டுமான பணிகள் செய்ய முடியாது.
ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான பணி மேற்கொள்ள, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியில் கட்டடம் கட்டப்பட்டால், வெள்ள நீர் உள்வாங்க வழியின்றி, தென்சென்னையில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த படுபாதக செயலுக்கு தி.மு.க., அரசு துணை போவதாகவும், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் கூட்டு சேர்த்து இந்த முறைகேடை செய்துள்ளதாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:
சுற்றுச்சூழலை பாதுகாக்க, சதுப்பு நிலங்கள் உயிர் நாடியாக திகழ்கின்றன. அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
இதை, தி.மு.க. அரசு தளர்த்தி, 15 ஏக்கர் நிலத்தை, 'பிரிகேட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
நவீன தொழில்நுட்பத்துடன் சதுப்பு நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டாலும், கட்டடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறிதான்; மேலும், ஒரு பெரும் வெள்ளத்திற்கும், புயலுக்கும், அக்கட்டடங்கள் தாங்காது என, நிபுணர்கள் கூறகின்றனர்.
தி.மு.க., அரசு, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுவதை ஏற்க முடியாது. சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் திட்டத்திற்கு வனம், வருவாய், சுற்றுச்சூழல் துறை உட்பட பல துறைகள் அனுமதி அளித்துள்ள மர்மம் புரியவில்லை.
திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, பல ஆயிரம் கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வருகின்றன. இதை, அ.தி.மு.க., கை கட்டி வேடிக்கை பார்க்காது.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை பாதுகாப்போம்; மேம்படுத்துவோம் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், அவரின் எண்ணத்துக்கு எதிராக பெரும்பாக்கம் - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டி.ஜி.பி., முன்னாள் வருவாய் துறை செயலர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து, விசாரணை செய்து, சதுப்பு நில பகுதி ஊழலை, முதல்வர் ஸ்டாலின் வெளிக்கொண்டு வர வேண்டும்.
இதுகுறித்த விசாரணை கோரி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்க தமிழக பா.ஜ., முழு முயற்சி எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
''பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆடம்பர குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அமைச்சர்கள், 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்பந்தம் போடுகின்றனர். மறுபுறம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சட்டத்தை மீறி, அனுமதி கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் கையூட்டு கைமாறியது; இது வெறும் நிர்வாக சீர்கேடா அல்லது தி.மு.க. அமைச்சர்களின் நேரடி தலையீடா? இத்தனை கேள்விகள் எழுப்பப்பட்டபிறகும் முதல்வர் அமைதி காப்பது பேரவலம். - சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
''சதுப்பு நிலத்தில் கட்டுமானம் அமைவதால், சென்னை பெரும்பாக்கம் பகுதியில், வெள்ள பாதிப்புகள், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சதுப்பு நிலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும். தவறு உறுதியானால் அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள்மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்.

