/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறைச்சி கடையால் குடியிருப்புவாசிகள் அவதி
/
இறைச்சி கடையால் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : அக் 27, 2025 03:00 AM
முகப்பேர்: முகப்பேர் மேற்கு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இறைச்சி கடையில், முறையாக கழிவுகளை அப்புறப்படுத்தாததால், கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பகுதிமக்கள் அவதியடைந்துள்ளனர்.
முகப்பேர் மேற்கு, நான்காவது பிளாக், ராமலிங்கம் சாலையில், கடந்த வாரம் புதிதாக இறைச்சி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அந்த கடையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள இறைச்சி கோழிகளில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தால், மூச்சுத்திணறல் போன்ற சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், முறையாக கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு, இப்பகுதியில் புதிதாக இறைச்சிக்கடை திறக்கப்பட்டது. அந்த கடையில் இறைச்சி கோழிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான துர்நாற்றத்தால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குமட்டல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுகிறது.
தெருவில் நடக்கவே முடியவில்லை. எனவே, கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

