/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் கடைகள் ஒதுக்கும் பணிக்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்
/
மெரினாவில் கடைகள் ஒதுக்கும் பணிக்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்
மெரினாவில் கடைகள் ஒதுக்கும் பணிக்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்
மெரினாவில் கடைகள் ஒதுக்கும் பணிக்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்
ADDED : ஜன 22, 2026 05:49 AM

சென்னை: -மெரினா கடற்கரையில், 300 கடைகளை ஒதுக்கும் பணிகளை கண்காணிக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமாரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தேவி உள்ளிட்டோர், மெரினாவில் கடை ஒதுக்க கோரிய மனுக்களை பரிசீலிக்கும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. கடந்த டிச., 22ல், மெரினா கடற்கரையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தாக்கல் செய்த திட்ட வரைபடத்தை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சென்னை மாநகராட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மெரினா கடற்கரை, 'லே அவுட்' வரைபடம், நீதிமன்றத்தால் செய்யப்பட்ட சிறிய திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.
மெரினாவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு நீலக்கொடி சான்று பகுதி தவிர்த்து, மேலும் மூன்று நீலக்கொடி சான்று பகுதிகளை, மாநகராட்சி உடனே துவங்க வேண்டும்.
இதற்கான பாதுகாப்பை, மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தரவேண்டும்.
மாநகராட்சி கமிஷனர் தலைமையில் செயல்பாட்டு குழு அமைக்க வேண்டும். மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை, 'பேன்சி' பொருட்கள் விற்பனை கடைகள் என, 300 கடைகள் மட்டுமே அமைக்க வேண்டும்.
கடைகள் ஒதுக்கீடு பணிகளை கண்காணிக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் நியமிக்கப்படுகிறார்.
அவருக்கு உதவியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி.மோகன்ராஜ், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற துணை பதி வாளர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
ஒதுக்கீடு செய்யப்பட உள்ள 300 கடைகளுக்கான குலுக்கலில், தற்போது உள்ள 1,417 கடைகளின் உரிமையாளர்களும் பங்கேற்க வேண்டும். குலுக்கல் தேதி, நேரம், இடம் ஆகியவை குறித்து, கண்காணிப்பு தலைவர் அறிவிப்பார்.
குலுக்கலில் தேர்வு செய்யப்படும் 300 பேரின் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். இந்த பணிகள் முடிந்தவுடன் உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்து, மார்ச் 4ல், மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

