ADDED : ஏப் 16, 2026 11:42 PM
எம்.கே.பி.நகர்:கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி, கூட்செட் பகுதியில் ரவுடிகள் பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட, வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோகுல்ராஜ், 26; வியாசர்பாடி, கல்யாணபுரம் தெருவை சேர்ந்த ரவுடி அரவிந்த் ராஜ், 33; வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்.நகரை சேர்ந்த முருகன், 27; வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரத்தை சேர்ந்த அஜிகுமார், 27 ஆகிய நால்வரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரவுடிகள் நால்வர் கைது
சென்னை, ஏப். 17-
பல்வேறு குற்ற வழக்குகளில் ரவுடிகள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பேசின் பாலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டிமலர்ஸ் சாலையில் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்திய புளியந்தோப்பு குருசாமி நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜு, 50 என்ற நபரை பேசின் பாலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, புளியந்தோப்பு பட்டாளம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன், 35, கங்கா கணேஷ், 19 ஆகிய இருவரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா, 19 என்ற நபரை ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.
