ADDED : ஏப் 06, 2026 04:51 PM
மாதவரம்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
மூலக்கடை, ஜி.என்.டி., சாலையில் ஜஸ்டின் பெர்னான்டோ, 45, என்பவர் 15 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு மாதத்திற்கு முன், இவரது ஓட்டலுக்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 30, என்பவர், அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்தார்.
இதில் ஜஸ்டின் பெர்னான்டோ அதிருப்தியடைந்து, தினேஷை எச்சரித்து வெளியே அனுப்பினார். இது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், ஜஸ்டின் பெர்னாட்டோ மற்றும் ஊழியர் முகமது நிஜார் ஆகியோர், மளிகை பொருட்கள் வாங்க, மூலக்கடைக்கு சென்றனர். அங்கு வந்த தினேஷ், போலீசில் தன்னை மாட்டிவிட்டதற்கு பலிவாங்க, இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
காயமடைந்த ஜஸ்டின் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவரது புகாரையடுத்து, மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷை நேற்று கைது செய்தனர்.
