ADDED : ஜூன் 24, 2025 12:22 AM

சென்னை, ரவுடி ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகளால், 'ஸ்கெட்ச்' போடப்பட்ட, ஆம்ஸ்ட்ராங் வலதுகரமான ஒற்றை கண் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023 ஆகஸ்ட் 18 ல், சென்னை பட்டினம்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொல்லப்பட்டார். இக்கொலையை, காரில் இருந்தபடி ராணிப் பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த ரவுடி ஒற்றை கண் ஜெயபால், 63 மற்றும் அவரது கூட்டாளிகள் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள், ஜெயபாலின் உயிருக்கு, 'ஸ்கெட்ச்' போட்டு நாள் குறித்து காத்திருந்தனர். இதனால், ஜெயபாலையும், அவரின் கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலையில், பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இவரின் வலது கரம்தான் ஜெயபால்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக, ஜெயபால் மற்றும் அவரின் கூட்டாளிகள் சிறையில் சதி திட்டம் தீட்டி வந்தனர். சிறைக்குள்ளும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், ஒற்றை கண் ஜெயபால் ஜாமினில் வெளியே வந்தார். வரும் ஜூலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது.
அதற்குள், ஆற்காடு சுரேஷ் தரப்பில் ஒரு தலையாவது மண்ணில் உருள வேண்டும் என, ஜெயபால் தரப்பு களமிறங்கி உள்ளது.
இதற்கிடையே, ஜெயபால் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். செம்பியம் பகுதியில் கஞ்சா விற்ற ஜெயபாலை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
**